அங்கே சூரியன் உதிக்கின்றது…

நான் எப்படி சூரியன் உதிக்கின்றது என்று சொல்கிறேன் –
ஒரு நேரத்தில் ஒரு இழையென –
தேவலாய கோபுரத்தில் ஊதாநிற கல் போல ஒளி மிதக்கின்றது –
செய்தி அணில்களை போல ஓடுகின்றது –
மலைகள் தங்களின் குல்லாய்களை கழட்டுகின்றன –
கீச்சான்கள் பாடத்தொடங்குகின்றன –
பின் நான் மெதுவாக எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் –
‘ஆம், அது சூரியனாய் தான் இருக்க வேண்டும்’

ஆனால் அது மறைவதை பற்றி – எனக்கு தெரியாது –
ஊதநிற ஏணி போல தோன்றும் ஒன்றில்
மஞ்சள் நிற பையன்களும் பெண்களும்
அடுத்த பக்கத்தை அடையும் வரை –
தொடர்ந்து ஏறுகின்றனர்
ஒரு சாம்பல் நிற ஆசிரியர் –
பறவைகளை கூட்டுக்கு அனுப்பி –
மெதுவாக மாலைக்கான தடுப்புகளை வைக்கின்றார் –

— எமிலி டிக்கன்ஸன்

Source: https://www.emilydickinsonmuseum.org/ill-tell-you-how-the-sun-rose/

மல்லிகை மணாளனே சென்னமல்லிகார்ஜீனா

அக்கமகாதேவி கர்நாடகத்தின் ஆண்டாள் என்று அழைக்கப்படுபவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் நவீன கவிதை போன்ற “வசனங்கள்” வீரசைவர்களிடம் மிகவும் பிரபலம். ஏறத்தாழ 300 இருக்கலாம் என கருத்தப்படும் இவை அக்கமகாதேவி வாக்குகள் என்ற பெயரில் தொகுப்பட்டு, புத்தகமாக கிடைக்கின்றது. சங்க இலக்கியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஏ.கே.ராமானுஜனே இப்பாடல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளர். தற்போது ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வினய சைதன்யாவால் இவை மேலும் மெருகூட்டப்படு Songs of Siva என்ற பெயரில் Harper Perennialஆல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.

Image Courtesy: Vikatan.com

அருமையான மொழியில், வாசிக்க எளிமையாக இருக்கின்றது புத்தகம். பாடல்களை பற்றி பார்க்கும் முன் பின்னணி தகவல்களை கொஞ்சம் பார்த்துவிடலாம். ஆண்டாள் மற்றும் பிற கதைகளைப்போலவே, சிறிய வயதிலேயே தன் கிராமத்தில் இருக்கும் சென்னமல்லிகார்ஜீனனை (சிவன்) மனதில் வரித்துகொள்கிறாள் மகாதேவி. ஆனால், ஜைன மன்னனை குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் மணமுடிக்க நேர்கிறது. எப்பொதும் சிவனை தொழ அனுமதிக்கவேண்டும், அவன் அடியவர்கள் எவர் வரினும் அவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும், குருவை சந்திக்க எந்த நேரமாயினும் அனுமதிக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் மன்னன் கெளசிகனை கரம் பற்றுகிறாள் மகாதேவி.

ஆனால் வெகுசீக்கிரத்தில் கெளசிகன் இந்நிபந்தனைகளை மீறுகின்றான். எனவே அவனையும் துறந்து, தன் உடலே தன் துன்பத்துக்கு காரணமென நினைத்து தன் ஆடைகளையும் துறந்து, தன் கூந்தலை மட்டுமே ஆடையாக உடுத்தி ஷ்ரீசைல மலைக்கு செல்கிறார். பின்னர், பசவண்ணரின் வீரசைவ இயக்கத்துக்கு தன்னை முழுமையாக அர்பணித்து, சென்னமல்லிகார்ஜீனனுக்கு பாடல் புனைவதையே தன் வாழ்வென கொள்கிறார். மல்லிகார்ஜீனனை தவிர்த்த பிறர் தன் சகோதரர்கள் என்று குறிப்பிட்டதால் மக்களால் அக்கமகாதேவி என்றழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் பல நூல்களில் இந்த கதை திரும்ப திரும்ப குறிப்பிடப்படுவதால், இது உண்மையான நிகழ்வாகவே இருக்கக்கூடும்.

Image Courtesy: Vikatan.com

பன்னிரண்டாம் நூற்றாண்டு ஏறத்தாழ சைவ, வைணவ மதங்களின் பொற்காலம். புத்த, சமண மதக்கருத்துக்கள் இம்மதங்களால் உள்வாங்கப்பட்டு, புதிய பிரிவுகள் உண்டாகிக்கொண்டிருந்த நேரம். அதனடிப்படையில் பார்த்தால், இரண்டு வகைகளில் அக்கமகாதேவியின் வாழ்க்கை முக்கியமாகின்றது. முதலாவது, அப்போது கர்நாடகத்தில் ஜாதி பேதங்களை மறுத்து, வேதங்களை அறிவது மட்டுமே கடவுளை அறிவது அல்ல என்று கூறி சம்ஸ்கிருதத்தை மறுத்து, கன்னடத்தில் வசன கவிதைகள் மூலமாக சைவத்தை பரப்பிய பசவண்ணரின் வீரசைவம் வேகமாக பரவிக்கொண்டு இருந்தது. அதில் ஒரு முக்கிய பங்காற்றியதாக அக்கமகாதேவியின் வசனங்களைச்சொல்லலாம். மேலும் சமணதின் தாக்கத்தில் பெண்ளுக்கு, ஆண் அடைய விரும்பும் உண்மைநிலையை அடையவிடாமல் தடுப்பவள் என்ற நோக்கில், பல சமய கட்டுபாடுகளும், ஆடை துறத்தல் போன்ற சடங்குகளும் தடை செய்யப்பட்டிருந்தன. அவைகளை அக்கமகாதேவி மீறியதன் மூலம் ஐந்து விதமான தீட்டுகள் (தூமைத் தீட்டு, சாவுத் தீட்டு, குழந்தைப் பேறுத் தீட்டு, சாதித் தீட்டு, மற்றும் கைம்பெண் கோலம்) சரணர்களுக்கு (வீரசைவத்தை தழுவியவர்கள்) இல்லை என வீரசைவம் ஏற்றது.

அக்கமகாதேவியின் வசனங்களை, (1) உடல், காமம் போன்ற கீழ்மைகளால் வரும் துன்பம் (2) மாயையினால் வரும் துன்பம் (3) தன் துறவை பற்றிய விளக்கம் (4) சென்னமல்லிகார்ஜீனன் மீதான காதல் என நான்காக பிரிக்கலாம். பொதுவாக சாதரண மதக்கருத்துகளையே முன்வைத்தாலும் அவை சொல்லப்படும் தன்மை என்ற வகையில் இவ்வசனங்கள் முக்கியமாகின்றன. மேலும், ஆண்டாள், மீரா போன்று பெண் என்ற நிலையில், பித்தாகி, கடவுளையே தன் கணவனென எண்ணி உருகும் வகையிலான வசனங்கள் மிகவும் குறைவு. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து வடக்கு நோக்கி புறப்பட்ட பக்தி இயக்கம், பிற தத்துவ மதங்களோடு சேர்ந்து தன் அடிப்படை நெகிழ்வு மற்றும் இசை தன்மையில் இருந்து விலகி கெட்டிபட்டிருப்பதை அக்கமகாதேவியின் வசனங்களில் இருந்தே காணலாம். எனவே ஆண்டாள் தரும் மயக்கமோ அல்லது தேவாரத்தின் கவிதைத்தன்மையோ இக்கவிதைகளில் அமைவதில்லை. தத்துவநோக்கு, கூர்மை, எளிமை என்பதே பெரும்பாலான வசனங்களின் அமைப்பு. ஆனாலும் beautiful as jasmine; but pointed like arrow என ஆங்காங்கு கவித்துவம் மிக்க வரிகள் இவை கவிதைகளும் கூட என்கின்றன.

கீழ்கண்ட வசனங்கள் என்னளவில் ஒரு தரிசனத்தை தருவதாக அமைந்தன.

stream behind, river ahead
which is the way?
lake behind, trap ahead
which is easy?

Once you have eaten the fruit,
Does it matter who prunes the tree?
Once you have left your woman,
Does it matter who sleeps with her?
Once you have sold your land,
Does it matter who ploughs it?
Once Channamallikarjuna, jasmine-tender,
Is (not) known, does it matter whether
The body is eaten by dogs or rots in water?

What is full won’t spill,
What has trust won’t doubt,
What has come together won’t part,
What is wholly known won’t be forgotten.
O Channamallikarjuna, jasmine-tender,
The devotee in whom you are well pleased
Will have boundless joy.

One has the here, another the hereafter,
One has no here, another no hereafter.
Another has neither here nor hereafter.
Those who have taken refuge in
Channamallikarjuna, jasmine-tender,
Have both the here and hereafter.

அக்கமகாதேவியிடம் தேவாரம், திருவாசகம் மற்றும் பிரபந்தத்தின் தாக்கம் இருப்பதை கீழ்காணும் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது.

> Don’t be destroyed, don’t be destroyed,
> Hold fast to the feet of Siva.
> This body of yours is not indestructible,
> The pleasures of the world do not last forever.
> Before the word that Channamallikarjuna, jasmine-tender,
> Wrote is wiped off,
> Take refuge in Siva, soon.

> With a floor of emeralds,
> Festoons of gold and diamond pillars,
> A roof of coral,
> Pearls and jewels for ceiling,
> I was married;
> My people had me married.
> With bracelets and amulets
> And everlasting food stock,
> I was given in marriage to
> Channamallikarjuna, jasmine-tender.

> Actions won’t reach you;
> How will I worship you?
> Sounds won’t reach you;
> How will I sing of you?
> If the body reaches,
> You are invisible greatness;
> How shall I wear you in my palm?
> Not knowing anything of myself,
> Looking at you again and again
> I am amazed,
> O Channamallikarjuna, jasmine-tender.

ஆண்டாள் பாடல்கள் போன்ற கவித்துவமான அழகான கற்பனைகளையும் சில வசனங்களில் காணமுடிகின்றது.

> Listen, O sister, I had a dream:
> I saw rice, betel nut, coconut
> And palm leaf festoons;
> I saw the mendicant with small matted locks
> And shining pearly teeth,
> Come begging, O sister.
> I ran after him and caught him by the hand
> While he was running away;
> Seeing Channamallikarjuna, jasmine-tender,
> I opened my eyes.

> Don’t trust him
> For his coaxing ways;
> He is a cheat, this knower of the world.
> Showing liberation,
> He makes you forget devotion,
> Channamallikarjuna, jasmine-tender.

என்ன தான்,

> If you plant chaff instead of rice,
> Will it ever grow and give grain,
> Even if irrigated with holy water?
> Those without wisdom may
> Observe all the rules;
> Will they ever come to happiness,
> Free of desire?
> The scent that wafts, will it stay in one place?
> Those who do not know my god
> Channamallikarjuna, jasmine-tender,
> Know not the way of conduct.

போன்ற தத்துவார்த்தமான வரிகள் இருப்பினும், பெண் என்பதால் வரும் இன்னல்கள் பல சமயங்களில் அக்கமகாதேவியிடம் கேள்விகளை எழுப்புகின்றதாக தோன்றுகிறது. தான் ஒரு ஆணாக இல்லையே என நினைப்பதாகவும் தோன்றுகிறது. அர்நாரீஸ்வரனின் நோக்காக புரிந்து கொள்ளப்படும் இவ்வசனம் சில முக்கியமான கேள்விகளை மெளனமாக எழுப்புகின்றது.

> What if I am called by a woman’s name?
> In meditation, my form is masculine,
> O Basava, by your kindness.
> Restraining the over-lustful
> Channamallikarjuna, jasmine-tender,
> I am united, not knowing the two,
> O Basava, by your mercy?

கடவுளை புரிந்துகொள்ள அல்ல பெண்களை புரிந்து கொள்ளவாவது கட்டாயம் ஒரு முறை அக்கமகாதேவியை வாசிக்க வேண்டும்.


மேலும் தகவல்களுக்கு:

  1. பாவண்ணனின் அக்கமாகதேவி குறித்த சொல்வனம் கட்டுரை இணைப்பு
  2. பெருந்தேவியின் விகடன்-தடம் கட்டுரை இணைப்பு

உப்புவேலி – ஒரு அறிமுகம்

புத்தகம் படிப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு ‘இந்த புத்தகத்தை தேடுகிறேன்’ பட்டியல் இருக்கும். அது போல் என் பட்டியலில் இருந்த ஒரு நூல் Roy Maxhamன் The Great Hedge of India. ஆங்கில புத்தகம் ஏறத்தாழ ரூ.3000க்கு விற்க, அப்புத்தகத்தை வாங்குவதை தள்ளி போட்டபடியே இருந்தேன். தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை தமிழில் உப்புவேலி என்ற பெயரில் மொழிப்பெயர்த்து இருப்பது தெரிந்தது. அமேஸானில் தேடப்போக, ரூ.100க்கே கிண்டில் பதிப்பு கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இதன் ஆங்கில பதிப்பு குறித்து தமிழ் சூழலில் பல்வேறு குறிப்புகள் காணக்கிடைகின்றன. தமிழின் முக்கிய எழுத்தாளர்களான் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர், இந்த நூல் குறித்தும் இந்தியாவில் இருந்த உப்புவேலி குறித்தும் விரிவாகவே எழுதி இருக்கின்றனர். இது வரை அந்த குறிப்புகளை படிக்காதவர்களுக்காக இந்த சிறிய அறிமுகம்.

இன்று உப்பு ஒரு சாதரண பொருளாக உணவின் சுவை கூட்டியாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உடலின் ஆரோக்கியத்திற்க்கு அது இன்றியமையாத ஒன்று. அதீத உப்பு குறைபாடு மரணம் வரை கொண்டு செல்லக்கூடும். மேலும், குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலங்களில் உப்பு முக்கியமாக உணவை பதப்படுத்த உபயோகப்பட்டது. விளைச்சல் இல்லாத குளிர் காலங்களில் பதப்படுத்தபட்ட உணவே முக்கிய உயிர்சக்தியாக அந்நாட்களில் விளங்கியது. எனவே உலகம் முழுவதுமே உப்பு ஒரு முக்கிய வணிகப்பொருளாகவும், சீனா போன்ற நாடுகளில் 1700கள் வரை கூட பணத்திற்க்கு மாற்றாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக முதலாம் நூற்றாண்டு முதலே உப்புக்கு வரி விதிப்பது உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இந்த பல லட்சம் பேரை கொல்லக்கூடிய கொடூர வரியாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிகாலத்தில் உப்புவரி இந்தியாவிற்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பரந்த மத்திய இந்தியாவில், உப்புக்கான மூலங்கள் குறைவு. அது பெரும்பாலும் தென்னக கடல் கரைகளில் இருந்தோ, மேற்கு குஜராத் பகுதிகளில் இருந்தோ அல்லது, பஞ்சாபின் இயற்க்கையான உப்புமலைகளில் இருந்தோ பெறப்பட்டு வந்தது. இந்தியா முழுவதும் பரந்திருந்த வணிக பாதைகளின் வழியே இவை தங்கு தடை இன்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் கிடைத்து வந்தது. இந்தியா முழுமையும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு வந்த பொழுது, அவர்களுக்கு உப்பு வரி பெரும் வாய்ப்பாகத்தோன்றியது. ஏனெனில் மத்திய இந்தியாவுக்கும், வங்கத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. எனவே ஒரிசா முதல் பஞ்சாப் வரை மத்திய இந்தியாவின் குறுக்கே பல்வேறு இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு, உப்பு வணிகம் கண்காணிக்கப்பட்டது. மேலும் 20 முதல் 30 சதவீதம் வரை உப்புக்கான வரி விதிக்கப்பட்டது. இது இயல்பாக உப்பு கடத்தலுக்கு இட்டுச்சென்றது. கடத்தலை தவிர்க்க 1850களில் இந்தியாவின் குறுக்கே ஒரு வேலி அமைப்பதென முடிவு செய்யப்பட்டு காய்ந்த முள் கொடிகள், மரத்தடுப்புகளால் வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனால், நெருப்பு, கரையான் போன்றவற்றால் இவற்றின் பராமரிப்பு பெரும் செலவுடையதாக இருந்தது. எனவே 1860களில் உயிர் வேலிகள் அமைப்பதென முடிவுசெய்யப்பட்டு, அதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டன. இவை ஏறத்தாழ 14 அடி அகலமும், 8 முதல் 10 அடி வரை உயரமும் கொண்ட முள் புதர்களால் அமைக்கப்பட்டன. சீனாவின் பெருஞ்சுவரை விட நீளமாக இருந்த இந்த வேலியின் இடையே காவல் கோபுரங்களும் சுங்கசாவடிகளும் அமைக்கப்பெற்றிருந்தன. அதன் முக்கிய காலகட்டமான 1870களில் ஏறத்தாழ 14,000 முழுநேரப்பணியாளர்கள் இந்த வேலியில் பணியாற்றினர்.

இதனால் இந்தியாவின் உப்பு வணிகம் முழுமையும் ஆங்கிலேயரின் கைக்குள் வந்தது. மேலும், அதீத உப்பு வரி மத்திய இந்தியாவிலும் வங்க பகுதிகளிலும் உப்பின் நுகர்வை பெருமளவு குறைத்தது. அன்றைய நாட்களில் ஒரு சராசரி இந்தியன் தன்னுடைய இரண்டு மாத சம்பளத்தை ஒரு வருட உப்பிற்க்கு செலவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஏழைகளும் வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் தான். குறைவான உப்பு நுகர்ச்சி அவர்களை மந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்க கூடும். மேலும் 1860களின் கடும் இந்திய பஞ்சத்தின் போது கூட உப்பின் மீதான வரி குறைக்கப்படவில்லை. எனவே மக்கள், விதைப்பிற்க்கு வைத்திருந்த தானியங்களைக்கூட உப்பிற்காக செலவு செய்ய நேர்ந்தது. 1850க்கும் 1875க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் ஏறத்தாழ 40 லட்சம் பேர் உப்பு குறைவு தொடர்பான நோய்களால் இறந்திருக்ககூடும் என சமீபத்திய ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன. இறுதியாக 1879ல் இந்த வேலிகள் கைவிடப்பட்டன. ரயிலின் அறிமுகமும், இங்கிலாந்தில் இருந்து உப்பின் இறக்குமதியும் பெரும் பராமரிப்பு தேவைப்பட்ட இந்த வேலிகளை கைவிடுவதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தன. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தும் கூட உப்புவேலி குறித்து எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லாமல் போனது ஆச்சரியமே.

1995ல் லண்டனில் நூலக காப்பாளராக இருந்த ராய் மேக்சிம் ஒரு பழைய புத்தக கடையில் கிழக்கிந்திய அதிகாரி ஒருவரின் நாள் குறிப்பை வாங்குகிறார். அதில் உப்புவேலியில் பணி புரிந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டு இருப்பது, இந்தியாவியல் அறிஞரான ராயை குழப்புகின்றது. ஆக்ஸ்போர்டின் இந்திய சரித்திரம் நூலில் இருந்து, இந்திய வரலாறு தொடர்பான பல நூல்களை ராய் பார்த்தபோதும் எதிலும் உப்புவேலி குறித்த பதிவுகள் இல்லாதது கண்டு குழம்புகிறார். பின்னர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பிரிட்ஷார் இங்கிலாந்துக்கு அனுப்பிய அலுவலக குறிப்புகளுக்கான காப்பகத்தில் இந்த வேலி இருந்தது குறித்து உறுதி செய்துகொள்கிறார். ஆனால் துல்லியமான தகவல்களை அவரால் பெற முடியவில்லை. 1996, 1997 மற்றும் 1998ல் மூன்று வெவ்வேறு பயணங்களில் உத்திரபிரதேசத்தின் பல இடங்களில் அந்த வேலியின் மிச்சம் ஏதாவது இருக்கின்றதா, அப்பகுதி மக்களுக்கு ஏதாவது தெரிகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இறுதியில், ஜான்சிக்கு அருகே ஒரு வேலியில் சிறு மிச்சத்தை கண்டுகொள்கிறார். அவரின் பயணம் குறித்தும், உப்புவேலி குறித்தான தகவல்களையும் The Great Hedge of India நூலில் விவரிக்கின்றார்.

மின் புத்தகம் சரியாக வடிமைக்கபடாத போதும், மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றது. ஏறத்தாழ ஒரு மர்ம நாவலை படிக்கும் விறுவிறுப்புடன் ராயின் பயணங்கள் விவரிக்கப்பட்டிருகின்றன. மேலும் உப்பு வரி குறித்தான விரிவான பார்வை, அதன் தாக்கம், பாதிப்பு போன்றவை இந்த துறையில் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக சொல்லப்பட்டிருகின்றன. அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான நூல்.

கிண்டிலில் வாங்க: https://amzn.to/2NpADsp
புத்தகமாக வாங்க: https://bit.ly/2NiY6ep

தமிழ் இந்துவில் உப்பு வேலி குறித்து சிறில் அலெக்ஸின் கட்டுரை: https://bit.ly/2MQQNew

உண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்

நேர்காணால்: பிலிப் பால்

பல்அண்டம் போன்ற நிறுவ இயலாத கொள்கைகள் ஆட்டம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், மெய்மை அறிவியலின் ஒரு பகுதி என வாதிடுகிறார் மிச்செல்லா மாசிமி.

அறிவியலில் தத்துவத்தின் பங்கு என்ன என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாகும். ஒருபுறம், இழைக்கொள்கை, பல்அண்டம் போன்ற துறைகளைச்சார்ந்த விஞ்ஞானிகள், இக்கொள்கைகளை நிறுவ இயலாத போதும் தத்துவரீதியாக இவற்றுக்கு அறிவியல் முக்கியத்துவம் உண்டு என்கின்றனர். இன்னொருபுறம், ரிச்சர்ட் பெய்ன்மான், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளோ அறிவியலில் தத்துவம் என்ற பிரிவே தேவை இல்லை என்கின்றனர்.

Professor of the philosophy of science Michela Massimi is based at (and pictured in) the University of Edinburgh, UK, on Thursday 17 May 2018.

சமீபத்தில் ஐக்கிய ராஜ்ஜியங்களின் (U.K.) ராயல் அகடெமி வழங்கும் வில்கின்ஸ்பெர்னல்மெடவர் பதக்கத்தினை பெற்ற மாசிமியோ, தன்னுடைய விருது ஏற்பு உரையின் போது, தத்துவம் அறிவியலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் என குறிப்பிட்டார். மேலும் பயன் அடிப்படையில் தத்துவம் அனுகப்படக்கூடாது என்றும், சமூக, தனிமனித முன்னேற்றத்தில் தத்துவத்தின் பங்கு ஆராயப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அறிவியலில் தத்துவத்தின் பங்கை குறித்து ஆராயும் அதே வேளையில், யதார்த்த போலி யதார்த்த சித்தாந்தங்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் மாசிமி ஆராய்ந்து வருகிறார். அவருடைய ஆய்வானது அறிவியல் ஒருபடித்தான உண்மையை நோக்கி நகர்கிறதா அல்லது வெறுமனே நிகழ்வுகளை குறித்த தரவுகளை மட்டும் சேகரிக்கின்றதா என்கிற முக்கியமான கேள்வியயை முன் வைக்கின்றது. மாசிமி, இத்தாலியில் பிறந்தவர். தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைகழகத்தில் உண்மையில் குறித்தான ஆய்வுகளை மேற்க்கொண்டு வருகிறார். இவருடைய முன்னோக்கிய யதார்த்தவாதம்என்ற கூற்று, சமூக மற்றும் வரலாற்று காரணிகளை உள்ளடக்கிய அறிவியல் முன்னேற்றத்தை குறித்து விவரிக்கின்றது. இது, சமீபகாலத்தில் தத்துவத்துறையில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும். இது அவர் குவாண்ட மேகசினுகாக வழங்கிய பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவமாகும்.

பறவைகளுக்கு பறவையியல் எவ்வளவு உபயோகப்படுமோ அந்த அளவே தத்துவம், அறிவியல் விஞ்ஞானிகளுக்கு உபயோகப்படும் என்று ரிச்சர்ட் பெய்ன்மான் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

புகழ் பெற்ற விஞ்ஞானிகளின் ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவை குறித்து விவாதிப்பது, தேவைஇல்லாத, வீண் சச்சரவுகளையே உண்டாக்கும். இவை, ஒன்று தத்துவம் அறிவியலின் தவிர்க்க முடியாத கூறு என்றோ அல்லது தத்துவம் அறிவியலுக்கு தேவையே இல்லை என்றோ ஓர் ஒற்றை அனுமானத்தில் தான் முடியும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு பயன் உண்டு என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரோமானிய வரலாறு ரோமானியர்களுக்கு எவ்வளவு பயன்படும் என்ற கேள்விக்குள் ரோமானிய வரலாற்றை சுருக்கிக்கொண்டுவிட முடியாது. இது தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகளுக்கும் பொருந்தும். அவ்வாறு சுருக்குதல் பொருளற்றது என்றால், தத்துவ அறிவியல் மட்டும் ஏன் அந்த வரையரைக்குள் புகுத்தப்பட வேண்டும்?

பின், அறிவியலில் தத்துவ அறிவியலின் பங்கு தான் என்ன? பெரும்போக்காக பார்க்கும் போது, தத்துவம் ஒட்டுமொத்த மனித இனத்துக்குமானது என்பேன். எங்களைப்போன்ற தத்துவவாதிகள் அறிவியலை வார்த்தைகளில் விளக்குகின்றோம். நாங்கள் அறிவியல் முறைமைகளையும், மாதிரிகளையும் ஆராய்கின்றோம். நாங்கள், அறிவியலின் கோட்பாட்டு அடித்தளங்களோடும், கருத்துரு நுணுக்கங்களோடும் தொடர்புகொண்டுள்ளோம். இந்த அறிவுசார் ஆராய்ச்சிக்காக மனிதகுலம் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அண்டவியலில் பேய்சியன் புள்ளியல் முறையில் ஆய்வு செய்பவரோ அல்லது அதிஆற்றல் இயற்பியலில் எளிமைப்படுத்தப்பட்ட மாதிரிகளையோ உருவாக்கும் தத்துவ அறிவியலாலரின் பங்கு, மனிதகுலத்திற்க்கு ஒரு தொல்லியல் அறிஞரோ, வரலாற்று அறிஞரோ அல்லது மானுடவியல் அறிஞரோ அளிக்கும் பங்குக்கு சற்றும் குறைவானது இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல விஞ்ஞானிகள், குறிப்பாக, ஐன்ஸ்டைன், போர், மேஃக் மற்றும் போர்ன் போன்றோர் தத்துவவியலில் அதிக ஆர்வம் காட்டினர். அம்மாதிரியான ஆர்வம் தற்போது குறைந்துள்ளது என கருதுகிறீர்களா?

ஆம். நாம் அறிவியல் குறித்தான தனித்துவமான எண்ணங்களை கைவிட்டுவிட்டோம். அறிவியல் மறுமலர்ச்சியின் போது உண்டான இது போன்ற யோசனைகளை இழந்துவிட்டோம். தத்துவவியல் நமது கலச்சார அறிவியலில் ஒரு முக்கியமான பங்கு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சார்பியல் மற்றும் குவாண்டம் கொள்கைகளின் பிதாமகர்கள், தத்துவத்தின் முக்கியத்துவதை அறிந்திருந்தனர். அப்போதைய இயற்பியல் விவாதங்களில் தத்துவம் ஒரு முக்கியமான இடத்தைக்கொண்டுருந்தது. ஐன்ஸ்டீனும் ஃபோரும் குவாண்டம் இயற்பியலின் முழுமையை குறித்து விவாதிக்கையில், அதில் பொருண்மையின் உண்மைஎன்பதன் விளக்கம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். குவாண்டம் இயற்பியல் அனுமதிக்காவிட்டாலும், எலக்ட்ரானின் உண்மையானஇடத்தையோ அல்லது உண்மையானவேகத்தையோ கணக்கிடமுடியுமா? என்ற கேள்வி ஒரு தத்துவவாத கேள்வி.

இது போன்ற விவாதங்களை பல காரணங்களுக்காக இப்போது நம்மால் காண முடிவதில்லை. இயற்பியல் விஞ்ஞானிகள் இப்போதெல்லாம் பல்கலைகழகங்களில் படிக்கும் போது வேறு துறை பாடங்களையோ அல்லது பள்ளி வகுப்புகளில் விரிவான பாட முறைகளையோ பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதிக அளவில் இணைந்து மேற்க்கொள்ளப்படும் ஆய்வுகளில் குறைந்த அளவே அறிவியல் அறிவு தேவைப்படுகிறது. விரிவாக சொல்ல வேண்டுமானால், அறிவியல் ஆய்வுகளின் பண்பாடு வெளிப்படும், நிறுவன பயிற்ச்சிகள், ஆய்வு குறித்த மதிப்பீடு, ஆய்வுகான வசதிகள், ஆய்வுக்கான நிதி போன்றவை பெருமளவில் மாறியுள்ளன. இன்று அறிவியல் ஆய்வு என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு உபயோகப்படும்படியோ, அல்லது முற்றிலும் உபயோகம் இன்றியோ தான் உள்ளது.

எனவே, தத்துவ அறிவியல் (மற்றும் மானுடவியல்) போன்ற அடிப்படை ஆராய்ச்சிகள் அவசியமாகின்றது. இவை நமது கலாச்சார பெருமையிலும், அறிவியல் வரலாற்றிலும் இன்றிமையாத ஒரு பகுதி என்பதை நாம் உணரவேண்டும்.

அறிவியலின் வேகத்துக்கு தத்துவத்தால் ஈடுகொடுக்கமுடியவில்லை என்று ஒரு குற்றசாட்டு உண்டு. அறிவியல் தத்துவவியலில் புதிய கேள்விகளை தோற்றுவித்துள்ளது என நீங்கள் கருதுகிறீர்களா?

நான் மீண்டும் வலியுருத்திக்கூறுவது என்னவென்றால், அறிவியலுக்கான அதே அளவீட்டை தத்துவத்துக்கு பொருத்தக்கூடாது என்பதே. எடுத்துக்காட்டாக, அறிவியலின் முன்னேற்றம் எவ்வாறு அளவிடப்படுகிறது? அது இறுதி விடையை நோக்கி எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கின்றது என்பதைக்கொண்டா? அல்லது கேள்விகளைத்தீர்க்கும் வேகத்தைக்கொண்டா? அல்லது, தொழில்நுட்ப வளர்ச்சியைக்கொண்டா? இன்னும் சொல்ல போனால் மேற்ச்சொன்ன கேள்விகளே தத்துவமுக்கியத்துவம் உடையது.

1960கள் வரை அறிவியலின் முன்னேற்றம் என்பது, புதிய கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நிரூபிப்பதிலுமாக இருந்தது. விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கொள்கையை நோக்கி பயனிப்பதாக எண்ணினர். ஆனால் 60களுக்கு பின், தாமஸ் குஃன் போன்றோர், இதற்க்கு மாற்றாக எவ்வளவு வேகமாக பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என்பதைக்கொண்டு அறிவியல் ஆய்வின் வெற்றியை அளவிடத்தொடங்கினர். அறிவியலின் அதிகபட்ச எல்லை என்ன என்பது குறித்தான கவலை இல்லாமல் போனது.

தத்துவ அறிவியல் தற்போது இம்மாதிரியான விவாதங்களை ஆராய்ந்து வருகின்றது. எனவே இன்று நமக்கு ஆய்வுப்பூர்வமான, அதே சமயம் வரலாற்று ரீதியிலான பிரக்ஞை ஏற்ப்பட்டுள்ளது.

அதே சமயம் நீங்கள் கூறியது போல, அறிவியலின் வளர்ச்சி புதிய கேள்விகளை தத்துவஇயலுக்கு நிச்சயமாக வழங்கியுள்ளது. குறிப்பாக, உயிரிமருத்துவம், பொறியியல், புவியியல் மற்றும் இயற்பியலில் போன்றவற்றில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட மாதிரிகளின் முக்கியத்துவம் மற்றும் அம்மாதிரிகளுக்கும் பரிசோதனைகளுக்குமான தொடர்பு போன்றவை தத்துவ அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல பேஃயன்ஸ் புள்ளியல், பேஃயன்ஸ் மாதிரி குறித்தான ஆய்வுகளை முடுக்கியுள்ளது. கடைசியாக, மூளைநரம்பியல் ஆய்வுகள் மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது என்ற தத்துவரீதியான முயற்ச்சிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பல்வேறுவிதமான முயற்ச்சிகளின் ஊடாக, தத்துவமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்து வருகின்றன என்றே கூறவேண்டும்.

அறிவியலில் யதார்த்த மற்றும் போலி யதார்த்தங்களுக்கு இடையே விவாதம் நடைபெருவதாக கூறியுள்ளீர்கள். அது பற்றி விளக்க முடியுமா?

ஆம். அந்த விவாதங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. மேலும் அது அடிப்படையில் அறிவியலின் தத்தவ நோக்கு குறித்தானது. அறிவியலின் அடிப்படையான கேள்வியென்ன? அறிவியலின் நோக்கம் இயற்க்கை குறித்த உண்மைகளை ஆராய்வதா? அல்லது காணப்பட்ட நிகழ்வுகளின் தரவுகளை மட்டும் சேகரிப்பதா?

இந்த வேறுபாடுகளை வான்வியலில் துல்லியமாக உணர்ந்துகொள்ளலாம். தாலமியின் வானவியல் பல நூறாண்டுகளுக்கு நிகழ்வுகளின் தரவுகளைசேமிப்பதாக மட்டுமே இருந்து வந்தது. கோள்களின் நீள்வட்ட பாதை குறித்த எந்த முன்னறிவிப்புகளையும் அது செய்யவில்லை. கோப்பர்நிக்கஸின் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது கோப்பர்நிக்கஸுக்கும் ரோமன் திருசபைகளுக்கும் இடையே சச்சரவுகளை உண்டாக்கியது. ஏனெனில் கோப்பநிக்கஸின் வானியல் கோள்களின் தரவுகளை சேமிப்பதற்க்கு பதிலாக அவற்றின் இயக்கங்கள் பற்றிய உண்மையை ஆராய்ந்தது.

இதை நாம் அப்படியே தற்கால அறிவியலுக்கு பொருத்திப்பார்க்கலாம். வண்ண குவார்க்குகள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது குவாண்டம் வண்ணைஇயக்கவியலின் வலிமயான தொடர்புகள் அவ்வாறு தோற்றமளிக்கின்றனவா? ஹிக்ஸ் போஸான் உண்மையான துகளா? அதே போல கரும்பொருள்? இவ்வாறாக எல்லையின்றி விரிவடைய முடியும்.

நீங்கள் முன்னோக்கிய யதார்த்தவாதம் என்ற கருதுகோளை முன்வைக்கின்றீர்கள். என்ன அது?

நான் முன்னோக்கிய யதார்த்தவாதத்தை யதார்த்தவாதத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றேன். அது உண்மைஎன்பது அறிவியலுக்கு முக்கியமான ஒன்று (குறைந்தபட்சம் என்னளவில்) என்று வலியுருத்துகின்றது. கிடைக்கும் சாட்சிகளின் அடிப்படையிலும், திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையிலும் சிறந்த மாதிரிகள் தயாரிக்கப்படலாம். ஆனால் நமக்கு இயற்க்கையை பற்றி கடவுளின் கண் இல்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். நமது கருத்துருவாக்கங்கள், கோட்பாடுகள், முறைமைகள் மற்றும் தொழில்நுட்ப கூறுகள் வரலாறு மற்றும் கலச்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. இதற்க்கு அர்த்தம், நாம் இயற்க்கையை குறித்த உண்மையை அறியமுடியாது என்பதா? நிச்சயமாக இல்லை. இதற்க்காக அறிவியலின் முன்னேற்றத்தை தடை செய்ய வேண்டுமா? கண்டிப்பாக இல்லை.

நீங்கள் விஞ்ஞானத்தில் ஆதாரத்தின் பங்கு பற்றி எழுதியுள்ளீர்கள். இது சூடான விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில், இயற்பியலின் சில பகுதிகள் போதுமான ஆதராங்கள் இன்றி உள்ளன. இந்த கோட்பாடுகளை சோதிக்க மாதிரிகளும் இல்லை. இம்மாதிரியான நிலையில், நீங்கள் பரிணாமவாதம் இல்லாதபோதும் உண்மையான அறிவியல் ஆய்வு (இந்த கட்டத்தில்) செய்யப்படலாம் என்று நினைக்கின்றீர்களா?

நான் குறிப்பிட்டது போல இது ஒரு முக்கியமான கேள்வி. நம் அறிவில் முன்னோக்குத் தன்மை இருந்தாலும், அது யதார்த்தமாக இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும் என்பதே கேள்விக்கான பதில். மேலும், இது நாம் எவ்வாறு கற்பனாவாத கூறுகளை சேகரித்து, பகுபாய்வு செய்து, ஆதரங்களை புரிந்து கொள்கிறோம் என்பதிலும் இருகின்றது (இது உண்மையானதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்). அண்டவியல் அல்லது துகள் இயற்பியல் போன்ற பகுதிகளில் ஆதாரங்கள் சேகரிப்பது மட்டும் கடினமான வேலை இல்லை, சான்றுகளை விளக்குவதற்கு நாம் கொண்டுள்ள கருவிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. அப்படியானால், அந்த கருவிகளை உண்மையைக் கண்டுபிடிப்பதற்கானவேலையில், காட்டாக அதிசமச்சீர் துகள்கள் அல்லது கரும் ஆற்றல் போன்ற துறைகளில், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று சொல்வது மிக முக்கியமானது.

எடுத்துக்காட்டுக்கு, அதிசமச்சீர் துகள்களை பற்றிய ஆய்வையே எடுத்துக்கொள்வோம். இங்கே ஒரு விஞ்ஞானி முதலில் கற்பனாவாத கோட்பாட்டை உருவாக்குகிறார், பின் அதிலிருந்து, அனுபவ ரீதியான விளைவுகள் எடுக்கப்படுகின்றன. பிறகு சோதனைச்சாலையில் விளைவுகள் சரியா, தவறா என்று சரி பார்க்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இது ஒரு பழமையான் வழிமுறையாகும். விளைவுகளை சோதிக்கும் விஞ்ஞானிகளுக்கு இது அதிகமான நேர விரையத்தை உண்டு பண்ணக்கூடியது. மேலும், அனைத்து துகள் கோட்பாடுகளையும் சரி பார்ப்பதோ, அல்லது அனைத்து அதிசமச்சீர் துகள் மோதல்கலன் தரவுகளையும் உபயோகப்படுத்துவதோ சாத்தியமற்றது.

மாற்றாக, துகள் இயற்பியல் ஆய்வாளர்கள் மேம்பட்ட முறையினை கைகொள்கின்றனர். இங்கு இலட்சிய மாதிரிக்குஅப்பாற்பட்ட புதிய, ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படாத, ஆற்றல் மண்டலங்களை ஒதுக்கிவிடுகின்றனர். எது நம்மால் சாத்தியமாகூடியதோ அங்கு மட்டும் புதிய வாய்ப்புகளுக்காக ஆய்வு மேற்க்கொள்கின்றனர். இம்முறையில், புதிய துகள்கள் எதுவும் கண்டுபிடிக்கபடாவிட்டாலும் துறை முன்னேறியதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

தத்துவரீதியாக பார்க்கையில் மாற்றம் என்பது பழைய யோசனைகளும், கோட்பாடுசோதனை இடையேயான ஒருங்கினைவு மட்டுமல்ல. மாறாக, அறிவியல் முன்னேற்றமும் உண்மையை நோக்கிய பயணமுமே ஆகும். அதே சமயத்தில், என்னைப்போன்ற யாதர்தவாதிகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். யதார்தவாதியின் பங்களிப்பானது, இயற்க்கையில் எது சாத்தியம் என்பதை பற்றியே இருக்கும். இதிலிருந்து உண்மையான சில படிகளை அடைவதே வெற்றியாகும். முன்னோக்கிய யாதார்த்தவாதம் இதனை நோக்கியே பயணப்படுகிறது.

இது குறித்தெல்லாம் எப்போது சிந்திக்க தொடங்கினீற்கள்?

1996ல் ரோம் பல்கலைகழகத்தில் உள்ள இயற்பியல் நூலகத்தில் பிசிகல் ரிவ்யூவின் பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது! தற்செயலாக 1935ல் வெளிவந்த ஐன்ஸ்டைன்பொடொஸ்கிரோசனின் குவாண்டம் இழையில் குறித்த கட்டுரையை கண்டேன். அதன் முதல் பக்கத்தில் இருந்த இயற்பியலின் உண்மைத்தன்மைஎன்ற சொல்லால் மிகவும் கவரப்பட்டேன். ஏன் ஒரு இயற்பியல் கட்டுரையில் உண்மைத்தன்மைகுறித்து கவலைப்படுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மேலும், அந்த கட்டுரைக்கு நீல்ஸ் போஃரின் பதிலையும் நான் கண்டேன். அதுவே உண்மைத்தன்மைகுறித்த என் ஆய்வின் முதல் படி.

அறிவியலின் மதிப்பை பரப்பியதற்காக ராயல் அகடெமியின் இந்த பரிசு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறும் அறிவியல் விவாதங்களில் தத்துவத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

நிறைய! நிச்சயமாய் ஒரு தத்துவவாதியின் வேலை அறிவியல் ஆய்வுசெய்வதோ அல்லது ஒரு கோட்பாட்டைவிட இன்னொன்று சிறந்தது என்று சொல்வதோ அல்ல! சில மோசமான தத்துவவாதிகள் இதனை செய்கின்றார்கள் என்று அறிவேன். ஆனால், என்னைப்பொருத்தமட்டில், ஒரு தத்துவவாதியின் வேலையானது, கோட்பாட்டு அறிவியல் ஆய்வில் ஆதாரங்களின் பங்கையும், அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை சோதிப்பதே ஆகும். முக்கியமாக ஆய்வு முறைமைகள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்று ஒரு தத்துவவாதி சோதிக்க வேண்டும்.

இந்த வகையில் தத்துவ அறிவியலின் பங்கு சமூகத்தில் இன்றியமையாதது என்று நினைக்கின்றேன். தத்துவவாதிகள் அறிவியலின் முக்கியத்துவத்தை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்ப்பார்கள். அறிவியலுக்காக குரல் கொடுப்பதிலும், பொதுவான அறிவியல் குறித்த தவறான கருத்துகளை விளக்குவதிலும், அறிவியல் சார்ந்த அரசியல் பிரச்சனைகளிலும், அறிவியல் திட்டங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதனால் தான் நான் எப்போதும், அறிவியலின் பயனை பற்றி மக்களுடன் விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி குவாண்டா மேகசின்