பட்டன் கதை

‘அண்ணேஏ… அண்ணேஏ…’ என்று யாரோ கத்திக்கொண்டு ஒடி வருவது போல் தோன்றியது. முத்துப்பட்டன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். கருநிலவு நாள். ஊரில் ஆங்காங்கு ஒரு சில விளக்குகளை தவிர்த்துப் பார்த்தால் இருள் எனும் போர்வைக்குள் ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. தாலட்டு பாடுவது போலச் சீவடுகளின் சத்தம் மட்டும் ரிங்காரித்து கொண்டிருந்தது. திம்மக்கா உள்ளிருந்து ‘என்னவாம் மாமோய் இன்னேரத்துல…’ என்று கேட்டது பட்டன் காதில் விழுந்தாலும், பதில் சொல்லாது படலை திறந்து கொண்டு வெளியே வந்தான். கொட்டிலிலிருந்து மேடேறி ஊருக்குள் நுழையும் பாதையில் சிறுவன் ஒருவன் சுளுந்தோடு ஓடி வருவது தெரிந்தது. யாரது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, ஆண்டிப்பகடையின் மகன் அருகில் வந்துவிட்டான். ‘அண்ணே, அய்யாவெ வெட்டிப் போட்டுட்டு ஒரு கூட்டம் பசு மந்தைய தாட்டிக்கிட்டு இருக்கினேஏ… பாத்தா, மறவைங்க மாதிரி இருக்கு… சீக்கிரம் வாங்கண்ணே…’ என்றான். பட்டனுக்கு ஒரு நொடியில் எல்லாம் விளங்கி விட்டது. சட்டென்று வீட்டினுல் பாய்ந்தவன் வலையத்தையும், ஈட்டியையும் எடுத்துக்கொண்டான். எட்டிப்பார்த்த பொம்மக்காவிடம், ‘கதவைச் சாத்திட்டு இருங்க, இந்தா வந்திடறேன்…’ என்று வெளியில் பாய்ந்தான். அதற்குள் சிறுவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. பட்டன், அவர்களில் கந்தப்பகடையை பார்த்து, ‘நீ வெரசா மேக்க போயி வழிக்காவலுக்கு நிக்கற ஆளுகள்ல ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு காட்டு பாதை பக்கமா வா. பெரிய மந்தைய ஓட்டிக்கிட்டு ஆரியநாட்டு பாதையில் போவ மாட்டனுவ. அனேகமா கச்சை கட்டிக்குப் பொறத்தாண்டயா மலை எறங்கி தெக்க போவனுகனு நெனைக்கேன். சீக்கிரம் போ. மலையெறங்கறதுக்குள்ளாற பிடிச்சி போடனும்’ என்று விட்டுக் கோலப்பனையும், அவனோடு இருந்து இன்னும் ரெண்டு இளைஞர்கலையும் கூட்டிக்கொண்டு கொட்டில் பக்கம் நடந்தான்.

மாமனார் வாலப்பகடைக்கு பின் பட்டன் வழிக்காவலை ஏற்றுக்கொண்ட பின், இந்த ஒரு வருடத்திற்குள் பொதியமலை பாதையா, நம்பி போலாமே என்று வணிகர்கள் சொல்லுமளவுக்கு பட்டன் வழிக்காவலை பலப்படுத்தியிருந்தான். இதனால், ஆரியங்காவில்லிருந்து, கொட்டாரக்கரை வரையுமே பாதுகாப்பான பகுதி என்று மக்களுக்கு நம்பிக்கை வந்திருந்தது. அப்படியிருக்கும் நிலையி யார் வேலையாய இருக்கும்? சட்டென நீலகண்ட தொட்டியாரை இரண்டு நாட்களுக்கு முன் பட்டன் பார்த்தபோது, அவர் சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

‘பட்டா, சாக்கிரதாயாய் இரப்பா… வன்னியக்கரந்தை தேவர்கள், உக்கிரம்பட்டி பாளையத்தில் இறங்கியிருக்கிறார்கள். பாளையத்தானுக்கும், தேவர்களுக்கும் ஏதோ பேச்சு நடப்பதாய, பங்கு பிரிப்பதாய், அரசல் புரசலாய் பேசிக்கொள்கிறார்கள்.’

ஆகா, ஆம். இது பாளையத்தானின் வேலையாய் தான் இருக்க வேண்டும். சமீப்பத்திய வழிக்கூலி தகராறுக்கு பாளையத்தான் நேரம் பாத்து காத்துக்கொண்டிருந்திருக்கிறன். மதுரை பிரதானியே சொல்லிவிட்ட பிறகு பாளையத்தானால் நேரடியாய் எதுவும் அப்போது பண்ண முடியவில்லை. இப்போது நேரடியாய் மோதமுடியாமல் பஞ்சத்தில் தவித்து வந்தவர்களை இங்கனுப்பி கழுத்தறுக்க பார்க்கின்றான் படுபாவி. வாலப்பகடை இருக்கும் போதே மாரி மழை பொய்த்து, காட்டுத்தீ அவ்வப்போது வந்து பயமுறுத்தினாலும், வணிகம் கொஞ்சமேனும் நடந்து கொண்டிருந்தது. மதுரையில் இருந்தும், நெல்வேலியில் இருந்தும், இன்னும் தூத்துக்குடி, விருதுநகரில் இருந்தெல்லாம் சரக்குகள் மலையாள நாட்டுக்குப் போய்க் கொன்டு தானிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டு மழை வர மறுத்துவிட, வையையிலேயே ஆட்கள் நடந்து மறுகரைக்கு போய்க் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். இந்தப் பக்கம் சாரலேனும் வீசிச் சற்று பச்சை படிய வைத்திருக்கிறது. இன்னும் கீழே இறங்கினால் வெறும் செம்மண் புழுதி தான். ஆரிய நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு அப்பாலும் இந்தப் பஞ்சம் பலரை கொன்றிருக்கின்றது. மதுரை நாயக்க அரசர், படை மானியங்களையெல்லாம், பஞ்சம் பாட்டுக்குச் செலவழிக்கிறார் என்று மந்திரி பிரதானிகளுக்குள்ளேயே சிறு சலசலப்பும் ஓடிக்கொண்டிருக்கின்றது. கோட்டைகாவலை தவிர்த்து, பாளையகாவல்காரர்களை அந்ததந்த பாளையங்களே பார்த்துகொள்ள வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டுவிட்டார். அத்துனை பேரும் வெறும் கையோடு அவரவர் பாளையங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள். பாளையங்களில், மலையோர பாளையங்கள் மட்டும் காட்டுக்குள் இறங்கி கொஞ்சம் சமாளிக்கின்றன. மதுரையிலிருந்து தென்கிழக்கில் எல்லாம், மக்கள் சாரி சாரியாய் பஞ்சம் பிழைக்க மேற்கே திருவிதாங்கூருக்கும், வடக்கில் மைசூருக்கும் போய்க்கொண்டு இருப்பதாய் பட்டன் கேள்விப்பட்டிருந்தான். காடும் மலையுமாய் கிடக்கும் கச்சை கட்டி பாதையிலே இப்போது ஜனநடமாட்டம் அதிமாகியுள்ளது.

முன்பெல்லாம், தூத்துக்குடிப்பக்கமிருந்து உப்பைச் சுமந்து கொண்டு வரும் ஒரு சில மாடுகளும், மதுரை பக்கமிருந்து வரும் ஜவுளி வியாபாரிகளுமே இந்தப் பாதை வழியாய மலையைக்கடந்து கொட்டாரகரைக்கும், பின்னே அங்கிருந்து மலையாள நாட்டுக்கும் செல்வர். சமீபமாய் நடமாட்டம் அதிகரித்தபோது கந்தப்பகடை, அப்போ இந்த மழைக்கு முன்னயே வருச காணிய எடுத்தரலாம் போலயே என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அத்தனையும் ஒரு வேளை சோற்றுக்கும் நாதியற்று பஞ்சம் பிழைக்கப் போகும் சனம் என. பாதையில் ஏறியவுடன் வழிக்கூலி கேட்டால் திகைத்து விழிக்கும் கண்கள்.

‘ஐயா சாமி, அந்தக் காசிருந்த நாங்க ஏனய்யா குஞ்சு குளுவானோட மலையேறிச் சாவறோம். கொஞ்சம் மனசெறங்குங்க சாமி’. கூப்பும் கரங்கள். பட்டன், மலைக்காவலுக்கு பொறுப்பான நீலகண்டன் தொட்டியாரோடு பேசினான். ‘சோத்துக்கு வழியில்லாதங்கிட்ட இனி வாங்க உசிரு மட்டும் தானய்யா இருக்கு’ என்று பட்டன் சொன்னபோது, ‘நீ உன் விருப்பப்படி செய்துகொள்ளடா முத்து. மதுரை தளவாயிடம் நான் பேசிக்கொள்கிறேன்’ என்றுவிட்டார். அன்றிலிருந்து, வழிக்கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பகடை கூட்டம், பொதிகைமலை வழி செல்வோருக்கு காவலுக்கு சென்றது.

ஆனால், இது தான் உக்கிரங்கோட்டை பாளையத்தானுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வழிக்கூலியில் பத்தில் ஒரு பங்கு என்பது பாளையம் பிரித்த நாளில் இருந்தே உண்டான முறை. அதற்குப் பதிலாய் நெல்லும், கம்பும் மலையேறி வந்து கொண்டிருந்தது. பட்டன் வழிக்கூலி வசூலிக்கவில்லை என்றானதும், பாளையம் தானியங்கள் அனுப்புவதை நிறுத்தியது. பின்னர் அது நடுவத்தவனின் ஆலோசனை என்று பட்டனுக்கு தெரிந்தது. பட்டனின் பெரிய அண்ணன் மதுரைக்கு போய்விட, நடுஅண்ணன் உக்கிரங்கோட்டைக்காரனிடம் கணக்கு வழக்கு பார்த்து வந்தான். அது ஒரு பெரிய கதை. பட்டன் பெரிதாய் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

பட்டனுக்கு வாலப்பகடையை சந்தித்த நாள் நினைவிலோடியது. அன்று அண்ணன்மாரோடு கொட்டாரக்கரையிலிருந்து முத்துப்பட்டன் திரும்பி வந்துகொண்டிருந்தான். வருடம் பல ஆகிவிட்டது அவன் ஆரியநாட்டிலிருக்கும் அவன் வீட்டிலிருந்து கிளம்பி. அங்கே இங்கே எனத்திரிந்து கடைசியாய் கொட்டாரக்கரை மன்னர் ராமராஜனிடம் வந்து சேர்ந்திருந்தான். படித்தவன், சூது வாது இல்லாத நியாஸ்தன் என்று கண்டு கொண்டபின் பட்டனின்றி மன்னன் ஒரு முடிவெடுத்துவிட மாட்டான் என்று ஆயிற்று. எப்படியோ கேள்விப்பட்டு அண்ணன்மார் கொட்டாரக்கரை வந்து விட்டனர். பட்டன் வர முடியாது என அவர்களிடம் மறுத்த போதும், மன்னனை பார்த்து, ‘தந்தை படுக்கையில் கிடக்கிறார். அவனுக்காய் பெண் ஒருத்தி காத்திருக்கிறாள். வரச்சொல்லுங்கள் ஐயா…’ என்று காலில் விழுந்துவிட்டனர். மன்னனுக்கும் விருப்பமில்லை என்ற போதும் சென்று வா, பட்டா என்று உரிமையாய் சொன்னதாலேயே பட்டன் கிளம்பினான். அரசறடித்துறை வந்து, களைத்துப்போய் சத்திரத்தில் ஒன்றில் அண்ணன்கள் படுத்துவிட்டனர். பட்டன் தாகத்தில் தண்ணீர் தேடி வந்தபோது தான், கொன்றை மலர்களையெடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக்கொண்டிருந்த திம்மக்காவையும் பொம்மக்கவையும் பார்த்தான். பக்கத்தில் இருந்த குளத்தில் சூரிய வெளிச்சம் பட்டு அவர்களின் மாந்தளிர் நிற சருமம் ஒளிர்ந்தது கொண்டிருந்தது.

யாரோ ஒருவன், தங்களை பார்பதை பார்த்த பெண்களுக்கு வெக்கம் வந்துவிட்டது. சட்டெனத் தங்களின் மூங்கில் கூடைகளை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு விரைவாய் நடக்கத்தொடங்கினர். பட்டன் இருகையை விரித்துகொண்டு அவர்கள் முன் சிரித்தபடி போய் நின்றான்.

‘ஐய்யோ சாமி, இது என்ன கூத்து’ என்றாள் அவனைப்பார்த்த திம்மக்கா.

அம்மா, வழிப்போக்கன் நான். வழியே போகையில், குயில் சத்தமோ என்று உங்கள் குரல் கேட்டு வந்தேன். ஆனால், குளத்தில் கிடக்கும் அல்லியை விட அழகான இரு பெண்கள் எனக்கொண்டேன். உங்களையே கலியாணம் கட்ட எண்ணம் கொண்டேன் எனச் சொல்லிப் பட்டன் சிரித்தான்.

பெண்கள் இருவருக்கும் கன்னம் சிவந்துவிட்டது. பொம்மக்கா, திம்மக்காவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள். தலை குனிந்திருந்த போதும் அவர்களின் சிரிப்பு பட்டனுக்கு தெரிந்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. திம்மக்கா, சற்றே தலை சாய்த்து பட்டனைப்பார்த்தாள். பின், ‘சாமி, நீயோ சாம்பசிவம் போல இருக்க. சக்கிலிச்சி எங்கள கட்ட உங்க குலம் தான் உடுமா, எல்ல எங்க குலம் தான் சம்மதிக்குமா. வழி விடு சாமி’ என்றாள்.

‘இல்லையம்மா, ஐயர் குல கொமறிகள்ல இருந்து, அரசர் குல கொமறிக வரப் பாத்து வந்தவியன் நான். உங்கள பாத்தே, தலை ஊமத்தையாச்சி எனக்கு.’ என்றவாறு அவள் கையைப் பிடிக்கப் போனான். சட்டென ஒரு உதறு உதறி, இருவரும் ஒரே நேரத்தில் காட்டுக்குள் ஓடத்தொடங்கினர். பட்டனும், தன் வேட்டியை சுருட்டிக்கொண்டு பின்னால் துரத்தினான்.

பெண்கள் நேரே போய் அவர்களின் தகப்பன் வாலப்பகடையிடம் சொல்லிவிட்டனர். பெண்களின் கண்களைக் கவனிக்கவில்லை பகடை. எவனடா அவன் என் பிள்ளைகளைத் தொடத்துணிந்தவன் எனக் கருக்கறிவாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான். பெண்களின் பின்னால் வந்த பட்டனோ காட்டுக்குள் வழிதவறி விட்டான். அங்குமிங்கும் அலைந்தவன், பெண்களைக் கண்டு தூரம் போயிருந்த பசியும் தாகமும் ஒன்று சேர்ந்து வந்து பிடிக்க, சற்றே கண்கள் இருண்டு வரப் பாதையில் படுத்து விட்டான். வாலப்பகடை முதலில் பார்த்தபோது ஏதும் அடிபட்டு இறந்துவிட்டானா என்று தான் நினைத்தார். ஒரு சிறிய கல்லை எடுத்துப் பட்டன் மேல் வீசி, ‘எலேய், எந்திரியப்பா… யாராது இங்கே வந்து கிடப்பது?’ என்றார்.

பட்டன் மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டான். பகடையோடு ஊருக்குள் வந்த பட்டனை பார்க்க ஊர் சனமே கூடிவிட்டது. திம்மக்காவும், பொம்மக்காவும் ஏதோ ஒரு வீட்டினுள் பதுங்கிக் கொண்டனர். பட்டன், சுவரசியமாய் அங்குமிங்கும் பார்த்தவாரு மன்றுக்கு வந்தான். ஊர் கூடி விசாரித்தபோது பட்டன், வாலப்பகடை மகள்களை மணம்புரிய வந்ததாகவும், ஊர் பார்த்து, பெற்ற வாலப்பகடை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். சிவந்த தோலில், வெண்ணிற பூணூல் அணிந்து நெற்றியில் பட்டையிட்டு சிவனே கச்சை கட்டி வந்தது போல் நின்றிருந்த பட்டனை ஊரே வேடிக்கை பார்த்தது. வாலப்பகடை பெண்கொடுக்க தயங்கியபோது, பட்டன், ஐயா காட்டுனா உம்ம மவளுகள தான்னு முடிவு பண்ணீட்டேன்.அதுக்கு நானென்ன செய்யோனும்னு மட்டுஞ்சொல்லுங்க என்றுவிட்டன். பகடையோ, சாமி, உன் பூணூல அறுத்துட்டு, குடுமிய மழிச்செறிஞ்சி, எங்கொலத்தில ஒருத்தனா நாப்பது நாள் மாடறுத்து தோலெட்டுக்க முடியுமா உன்னால? அப்படி மட்டும் இருந்திட்டேனா, நான் முன்ன நின்னு நடத்தி வைக்கிறேன் உன் கல்யாணத்த என்றார். பட்டன், ‘ஹா, அதுக்கென்ன ஐயா’ என்று விட்டான். விசயம் தெரிந்தபோது, பெரியவனைக் காட்டிலும் நடுவத்தவன் தான் ரொம்ப குதித்தான். கல்லெடுத்து மண்டையில் போட்டுக் கொல்கிறேனடா உன்னை என்றான். மானம் போச்சே, குடும்பத்துக்கான மரியாதை போச்சே எல்லாத்துக்கும் நீத்தாண்டா சக்கிலி பயலே காரணம் என்று பகடையை அடிக்கப்போனான். பட்டன் இடையில் வந்து தடுத்தான். அன்று வாலப்பகடை கண்காட்டியிருந்தால் இருவரையும் துண்டு துண்டாய் வெட்டிப்போட்டிருப்பார்கள் பகடை படையினர். ஆனால் அவர் அமைதியாய் இருந்துவிட்டார்.

அதன் பின்னும் ஒருநாள் அவன் வந்து பேசினான். ‘மாடு திங்கறவங்கூட உனக்கென்னடே சகவாசம்’ என்றபோது, ‘அண்ணே, மாடு பாலேல்லாம் நாம் குடிச்சி, பாலில்லையென்னு ஆன பின்னே தான் அவெங்ககிட்ட போவுது. அப்புறம் அவெங்க மாடு தின்னாம எப்பெடியண்ணெ உசிர் வாழறது’ என்றான். ‘ச்சீ ‘என்றவன், ‘ஏன்டா வயலுலே எலி, நத்தையும் நாம தரமா தாம் புடிச்சி திங்கறானுவள இவனுக’ என்றான். சிரித்தபடி பட்டன், ‘ஆமாணா, வயலுல விளைஞ்சதெல்லாம் நாம கொண்டு போறதால தான் வழியில்லாம இத தின்ன வேண்டி இருக்கு’ என்றான். அதன் பின்னும், சில மாதங்களுக்குக் கெஞ்சலும், மிரட்டலுமாய் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆரியநாட்டில் பட்டனின் கல்யாணத்தை முன்னிட்டு பட்டன் குடும்பத்தை ஊர் தள்ளி வைத்துவிட்டபின், குடும்பம் பிரிந்து தந்தை சேதுபதியிடம் செல்ல, அண்ணன் மதுரைக்கும், இவன் இங்கும் வந்து சேர்ந்தபோது கொல்லப்பட வேண்டியவன் இவன் என்று குடும்பம் முடிவுக்கு வந்திருந்தது.

இரண்டு வருடம் கழித்து, வாலப்பகடை, வழிக்காவலுக்கு சென்றவர், ஏதோ வண்டு கடி என்று படுத்து, நாலே நாளில் இறந்து போனார். ஆனால் அதற்குள் அவருக்கடுத்து பட்டன் தான் என்ற நிலைக்கு முத்துப்பட்டன் வந்திருந்தான். பொதியமலையின் மலைக்காவல் நீலகண்ட தொட்டியானிடம் இருந்தது. அவர் பட்டனை வரச்சொல்லி பேசினார். அரசறடித்துறையிலிருந்து கொட்டாரகரை வரை உள்ள மலைப்பாதைக்கு பட்டன் காவலிருப்பான் எனவும், பகடை இருந்தபோதிருந்தது போலவே உப்பு கொண்டு செல்வோரிடம் இரண்டு கழஞ்சும் பிறரிடம் நாலு கழஞ்சும் வழிக்கூலியாய் பெறும் உரிமையைப் பட்டனுக்கு தருவதென்றும் முடிவாகி, நீலகண்டன் மதுரை தளவானிக்கு சேதி சொல்லி ஓலை அனுப்பினார். அங்கிருந்து அனுமதி வந்து, ஒரே வருடத்தில் பொதியை மலை வழி கொள்ளை பயமில்லாதது என்று ஆனபோது பட்டனும், பட்டவராயனாயிருந்தான். ஒரு சில இடைஞ்சல்கள் என்றாலும் அதைத் தாண்டி உக்கிரங்கோட்டையிலிருந்து நடுவத்தவனால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. தானியத்தை நிறுத்தியபோது, கேள்விப்பட்ட மதுரை வணிகர்கள், பட்டன் சார்பாக நாயக்க மன்னனிடம் முறையிட்டார்கள். பஞ்சகாலமுழுவதும் உக்கிரங்கோட்டையிலிருந்து தானியங்கள் மலைக்குச் செல்ல வேண்டுமென ஆணை வந்தது.

ஆனால், பஞ்சமும், பட்டனின் தாரளமும் நடுவத்தவனுக்கும், பாளையத்தானுக்கும் சேர்த்து ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்தது. பாண்டியர் படையில் இருந்த தேவர்கள், மதுரையில் நாயக்கர் ஆட்சி வந்தபின் பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்டார்கள். வயலில், ஊர் காவலுக்கு என்றெல்லாம் அங்கங்கு சிதற, பஞ்சம் அதற்கும் வழி இல்லாமல் செய்துவிட்டிருக்கின்றது. வன்னியக்கரந்தையிலிருந்து தேவர்கள் இருபது பேர் உக்கிரங்கோட்டைக்கு வந்தபோது பாளையத்தானுக்கு கொஞ்சம் யோசனையாய் தான் இருந்தது. ஆனால் நடுவத்தவன் தான் இவர்களைப் பொதியை மலை பக்கம் இறங்கச்சொல்லலாம். களவுக்கு களவும் ஆச்சி. பட்டனை மூக்கறுப்பதாயும் ஆச்சி என்றான். கிடைப்பதில் பாதி பாளையத்தானுக்கு என்று முடிவாகி மறவர்கள் மலையேறினர். ஆனால், பகடை படை நேர்த்தியானதாய் இருந்தது. வழியில் இடைக்கு இடை காவல், பகலிரவெல்லாம் இருந்தது. நாலு நாளுக்குப் பின்னர், மறவர்க்கூட்டம், வழிக்கொள்ளையை விட ஊருக்குள் சென்று கொள்ளையடிப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தது.

இத்தனை கதையையும் யோசித்த போதும் கால்கள், குதிரையென வேகமாய் நடந்து கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் எப்போதோ பின்னுக்கு போயிருந்தனர். பட்டன் மீண்டு ஒரு பெரு மூச்சு விட்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். காத்திருக்க பொழுதில்லை. வலயத்தையும், ஈட்டியையும் கை மாற்றிப் பிடித்தவன், காட்டுப் பாதையில் நுழைந்தான். தூரத்தில் மந்தை செல்வது தெரிந்தது. பட்டன் ஓடிய வேகத்திலேயே வலயத்தை வீசி இருவரை வீழ்த்தினான். மறவர்களுக்கு இருட்டில் பட்டன் பேயுருவாய் தெரிந்தான். கண்ணிமைக்கும் பொழுதில் நால்வர், ஐவர் என வெட்டுப்பட்டதை பார்த்து, முன்னால் இருந்த கும்பல் பசுக்களை அப்படியே விட்டுவிட்டு ஓடத்தொடங்கியது. ஆண்டிப்பகடை மகன் பின்னால் ஓடி வந்தவன், மாடுகளைப் போவ், போவ் என்று திரட்டி ஊர்பக்கம் திருப்பத்தொடங்கினான். ஒருவரும் இல்லை என்ற பின் மந்தையின் பின்னால் சென்ற பட்டன், ‘லேய் மாடுகள அடை நா இந்தா இந்த ரத்தத்தியெல்லாம் கழுவிட்டு வாரேன்’ என்று குளத்துப்பக்கம் திரும்பி வந்தான்.

‘சதக்’ என்று தன் முதுகில் கத்தி இறங்கும் சத்தம் தெளிவாக முத்துப்பட்டனுக்கு கேட்டது. முதலில் காய்ச்சிய இரும்பால் முதுகை தீண்டியது போன்றதொரு எரிச்சல். பின் சூடான இரத்தம் வழிந்து உண்டாகும் மெல்லிய வெதுவெதுப்பு. பட்டன் முழங்காலை ஊன்றி முகத்தைத் திருப்பாமல் தன்னை குத்தியவனை நோக்கித் தன் வாளை வீசினான். சரியாகக் கழுத்திலேயே பட்டிருக்க வேண்டும். ‘ஹக்’ என்ற ஒலியோடு உடல் சேற்றில் விழும் சப்தம் கேட்டது.

முத்துப்பட்டன் வாளை மண்ணில் அழுத்தி ஊன்றி எழுந்தான். இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. திரும்பித் தன்னை குத்தியவனைப் பார்த்தான். குட்டையான உருவம். மெலிந்த உடல். பாதி துண்டான கழுத்திலிருந்து இரத்தம் பீச்சியடித்து கொண்டிருந்தது. கால்களும் கைகளும் இழுத்துக்கொள்ள, துடித்துக்கொண்டிருந்தான். மறவர் கூட்டத்தோடு வந்த வன்னியனாய் இருக்க வேண்டும். சண்டையின்போது தப்பித்து ஒளிந்து கொண்டு, இப்போது மாட்டு கொட்டிலிலிருந்து பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். தூரத்தில் காட்சியும், பூச்சியும் பாய்ந்து வருவது தெரிந்தது. முத்துப்பட்டனுக்கு வெறும் இருட்டாகத் தெரிந்தது. தள்ளாடியபடி கீழே சாய்ந்தான்.

வலியில் நெளிந்த பட்டனுக்கு சட்டென மிதப்பது போலிருந்தது. மெல்லிய காட்டுமல்லி வாசம் வந்தது. ஆ… பொம்மாக்காவா அது. பட்டன் சிரமப்பட்டு கணகளை திறந்தான். காலடியில் திம்மக்கா கிடந்து அழுவதும், தன் தலை பொம்மக்காவின் மடியில் இருப்பதும் பட்டனுக்கு தெரிந்தது. ‘இந்தக் காட்டுக்குள்ள கிடந்தவளுகள, தேடி வந்தியே ஐய்யா… நல்லசாதிவிட்டு, இந்தச் சிறுக்கிமவளுகளுக்காவ வந்து இப்பிடி கெடக்கியே ஐய்யா’ என்று திம்மக்கா கதறுவது பட்டனுக்கு மெலிதாய் கேட்டது. அவன் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டின் ஆளத்தில் இறங்கிக்கொண்டிருந்தான். ஆரிய நாட்டின் வயல்வெளிகள் அவன் காலுக்குக் கீழே காற்றில் அசைந்தது குறுகுறுப்பாய் இருந்தது. கொட்டாரக்கரை லட்சுமி குளத்து தண்ணீரை தும்பிகையில் எடுத்து இவன் முகத்தில் பீச்சினாள். ‘எலேய், எந்திரியப்பா… யாராது இங்கே வந்து கிடப்பது?’ வாலப்பகடையின் குரலா அது? பட்டனுக்கு உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது. வாலப்பகடை! எழுந்து நின்றான் பட்டன். எங்கும் பச்சை பொங்கும் காடு. தூரத்தில் ஒற்றை கொன்றைமரம் மட்டும் பூத்துக்குலுங்கி கொண்டிருந்தது. எங்கிருந்தோ இரண்டு பெண்கள் பாடும் குரல் கேட்டது. பட்டன் அப்படியே முற்றிலும் இருளினுள் மூழ்கினான்.

குறிப்பு:

நா. வானமாமலை பதிப்பித்த முத்துப்பட்டன் கதை நாட்டுபுற பாடல் புத்தகத்தின் அடிப்படையில் அமைந்தது கதை இது.

என்னோற்றாள்…

சித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள்? வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி? மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த கொடைக்கு அவளுக்கு பிடித்த பச்சை பாவடை அணிய வேண்டுமென்பது அவள் கனவு. அவளுக்கு அப்பா நியாபகத்துக்கு வந்தார். அவள் கேட்டதை ஒரு போதும் வாங்கி தந்திடாத, அவள் ஆசைகளை ஒரு போதும் நிறைவேற்றிவிடாத அப்பா. அவள் அப்பாவிடம் கேட்ட, அவர் ஒருபோதும் வாங்கித்தந்திடாத பச்சை பாவடை சட்டையின் நியாபகமும் வந்தது. மழை நீர் பட்டு பொன் என மின்னும் சோளத்தின் மரகதப்பச்சை. ஏன் அப்பா என் ஆசைகளை ஒரு போதும் புரிந்துகொள்ளவில்லை என நினைத்தாள். அதிருக்கட்டும், நீ என்ன புரிஞ்சுக்கிட்டியா என்ற கண்மணியின் குரல் தூரத்தில் எங்கிருந்தோ கேட்டது.

சித்ரா திடுக் என விழித்துக்கொண்டாள். செல்போனில் அலாரம் ஐந்து மணி ஆகிவிட்டது என்பதை அடித்துச்சொல்லிக்கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்து, கூந்தலை முடிந்து கொண்டே பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கண்மணியை பார்த்தாள். உறக்கத்திலும் ஒடுபவள் போல முகம் தீவிரமாய் இருந்தது. பிடிவாதக்காரி. நம்மை விடவா என்று நினைத்துக்கொண்டாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அதை தவிர்க்க விரும்புபவள் போல ‘ஹீம்’ என்று சேலையை உதறியபடி, கட்டிலை விட்டு கீழே இறங்கி, அறையில் இருந்து வெளியே வந்தாள். கூடத்தில் படுத்திருந்த அம்மாவும் அலாரா சத்தத்துக்கு எழுந்து விட்டிருந்தாள். மெளனமாக சித்ராவை பார்த்துவிட்டு, படுக்கையை சுருட்டிக்கொண்டு இருந்தாள். ஒரு போதும் பேசதவள். சித்ரா கணவனை உதறி வீட்டுக்கு வந்த நாளிலும் இதே பார்வையைத்தான் வீசினாள். பெரியம்மா தான் பொறுக்கமாட்டாமல் ஊமக்கோட்டனே நீயாவது சொல்லித்தொலையேண்டி என்று கத்தி கொண்டிருந்தாள். அதற்கும் அம்மா ஒன்றும் பேசவில்லை. அப்போது பேசி இருந்தாலும் ஒன்றும் நடந்திருக்கப்போவதில்லை. பேசுவதற்கு அவளுக்கு வாய்த்த தருணங்களில் ஒரு வேளை பேசி இருந்தால் இப்போது சித்ராவின் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும்.

சித்ரா, பால் பீச்சுவதற்காக பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தூரத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த செவலை அந்த இருட்டிலும் இவளை அடையாளம் கண்டுகொண்டு மெலிதாக ‘ம்மே’ என்றது. பாத்திரத்தை வெளி சுவரில் வைத்துவிட்டு, அருகில் கிடந்த சீவமாரையும், சாணிக்கூடையையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். செவலையின் குட்டி வெறித்த கண்களுடன், இவளையே பார்த்தது. அதனை கட்டியிருந்த கயிறு பல வாறாக அதன் கால்களிளேயே சுற்றி இருப்பது தெரிந்தது. அதன் கண்களை பார்த்தவளுக்கு கண்மணியின் நியாபகம் தான் வந்தது. பதினோரு வயதுதான் ஆகின்றது. எதைப்பற்றியும் பயமில்லை. எதைப்பற்றியும் கவலை இல்லை. தான் இந்த வயதில் எப்படி இருந்தோம் என வியந்தாள். கிழிந்த பாவாடையும் சட்டையுமாக காய்ந்து போன சோளக்காட்டுக்குள் ஆடு மேய்க்க வரும் பையன்களுடன் ஓடி ஜெயித்தது தான் நினைவில் இருந்தது. கண்மணிக்கு ஓட்டமெல்லாம் பிடிப்பதில்லை. ஏன் வெயிலிலேயே அவள் செல்வதில்லை. அவள் தகப்பனை உரித்து பிறந்திருக்கிறாள். இவளைப்போலன்றி கணக்கென்றால் உயிர் அவளுக்கு. வகுப்பில் முதலிரண்டு இடங்களுக்குள் வந்து விடுகிறாள். ‘செம ப்ரிலியண்டுங்க உங்க பொண்ணு. நல்லா படிக்க வைக்கங்க’ என்ற கார்த்திகா டீச்சரின் குரல் நியாபகத்துக்கு வந்தது. ஆம். அது மட்டுமே அவளால் முடிந்தது. அவள் அடையாத உயரங்களை அவள் மகள் அடையவேண்டும். அவமானமே அன்றாடமாகிப்போன இந்த வாழ்வில், அவள் வாழ்வதன் ஒரே அர்த்தம் கண்மணி தான்.

கண்மணியைத் தூக்கி கொண்டு சித்ரா பிறந்த வீட்டுக்கு வந்த போது அவளுக்கு மூன்று வயது. தனிமை இறுகும் தருணங்களில் கண்களில் தானாக கண்ணீர் வழியும். ‘ம்மா, அழாதமா… நான் உனக்கு சாக்கி வாங்கி தரட்டா’ என்று மழலையில் கொஞ்சும் கண்மணி தான் அவளை எல்லாவற்றில் இருந்தும் மீட்டாள். ஆனால், அவள் வளர, வளர, இருவருக்கும் இடையே ஒரு மெளன சுவர் மெலிதாய் எழும்பத்தொடங்கி விட்டது. இருவருக்குமான பிணைப்பு சண்டை, அவளின் பிடிவாதம், இவளின் தவிப்பு, பின் மகளுக்காக என இறங்கி சமாதானமடைகையில் மீண்டும் சண்டை எனத்தொடர்ந்து ஊசலாடிக் கொண்டு இருந்தது. இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென சிணுங்கல். தெற்காளூர் ரவியின் பையனுக்கு போன வாரம் பிறந்தநாள். வகுப்பில் கூடப்படித்த எல்லோரையும் கூப்பிட்டிருந்தான். இவள்தான் சாயங்காலம் சொசைட்டிக்கு பால் ஊற்றச்செல்லும் முன் சைக்கிளில் கொண்டுபோய் அவன் வீட்டில் இறக்கிவிட்டு வந்தாள். திரும்ப கூட்டிவரும் போதே கோரிக்கைகள் ஆரம்பமாகின. அம்மா, எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள, நானும் என் ப்ரெண்ட்ஸ கூப்பிடட்டா என்றாள் கண்மணி. இவள் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் காலையில், அம்மாயி எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள அப்ப என் எல்லா ப்ரெண்ட்ஸயும் வீட்டு கூப்பிட போறேனே என இவள் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. இவள் உள்ளே நுழையவும் கண்மணி தலையை குனிந்து கொண்டாள். அம்மா வழக்கம் போல வெறுமையாய் இவளைப்பார்த்துவிட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்த தோசையை திருப்பிப்போட்டாள்.

கறந்த பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது கண்மணி எழுந்து விட்டிருந்தாள். இவளைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டாள். சமையல்கட்டில் இருந்த அம்மாவிடம் பாலை கொடுத்துவிட்டு வெளியே வந்து, கண்மணியை பார்த்து டீ குடிக்கறியாடி என்றாள். அவள் ஏதும் சொல்லாது, புத்தகப்பையை நோண்டிக்கொண்டிருந்தாள். கோபமாக இருந்தது. என்ன பெண் இவள்? ஒரு தற்காலிக பி.டி. ஆசிரியைக்கு என்ன சம்பளம் இருந்து விட போகிறது. மாதம் 7500 வருகின்றது. சொசைட்டியில் இருந்து ஒரு 3000 வரும். அதும் பேங்கில் தான் போடுவார்கள். அதை எடுக்க கூட யாராவது தயவு வேண்டும். ஆண்கள் தான் நகருக்கு செல்பவர்களாய் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பேசினாலோ அவர்களின் மனைவிமார்களின் சாடைப்பேச்சிற்கு ஆளாக வேண்டும். கணவனை பிரிந்திருப்பவள் என்றாலே எல்லோருக்கும் ஒரு இளக்காரம் வந்து விடுகின்றது. ஆண்களுக்கோ இவளே வந்து மடியில் விழுவாள் என்ற எண்ணம். பெண்களுக்கோ தங்கள் வீட்டு ஆணை மயக்கி கூட்டிச்செல்வதே இவள் நோக்கம் என சந்தேகம். ஊருக்குள் இவளைப்பற்றிய பேச்சுகள் தெரியாததல்ல. சொசைட்டி ஆறுமுகத்தை இவள் வைத்திருப்பதாய் ஒரு பேச்சை இவளே கேட்டு இருக்கிறாள். கேட்டபோது இவளுக்கு முதலில் தோன்றியது அது மட்டும் உண்மையாய் இருந்தால் அவ்வளவு சிரமப்பட்டு சைக்கிளில் பால் கேனை ஏற்ற வேண்டி இருக்காது என்பதே. ஒவ்வொரு நாளும் கேனை ஏற்றி கட்டி, சைக்கிள் மிதித்து, மீண்டும் இறக்கி ஊற்றி எடுத்து வருவதன் வேதனை அவளுக்குத்தான் தெரியும். ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும் தோறும் தன் தந்தையை நினைத்துக்கொள்வாள். அவரைப்போன்று இருக்க கூடாது. என் மகளை நான் சிறப்பாய் வளர்ப்பேன் என்றெண்ணிக்கொள்வாள்.

கண்மணியின் அடம் தொடங்கியது எப்போது என சரியாக நியாபகம் இல்லை. சில நேரங்களில் தன் தகுதிக்கு மீறி அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தது தான் தவறோ என்று தோன்றும். அவ்வாறான ஒரு நாளில் தான் பணத்தை கண்மணியிடம் கொடுத்தே எண்ணச்சொல்ல ஆரம்பித்தாள். அதுல 7500 இருக்கா பாப்பா? ஒரு 2500, உன்னோட நகை சீட்டுக்கு, 2000 உன் பேருல இருக்கற சேவிங்ஸ் அக்கெளண்டுக்கு, 2000 பீசுக்கு, 4000த்த அம்மாயிட்ட இந்த மாச செலவுக்கு கொடுத்திடு என்பாள். இவள் இருபதை எட்டுமுன் ஒரு 10 பவுனாவது சேர்த்துவிட வேண்டும். ஒருவேளை ஏதாவது நல்ல காலேஜிக்கு போனாலோ, அல்லது கல்யாண செலவுக்கென்றோ ஒரு ரெண்டு மூணு இலட்சத்தையாவது சேர்த்து விட வேண்டும். இது தான் சித்ராவின் இப்போதைய இலக்கு. ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளும் வயது இல்லையே. டிசைன் செருப்பு, புது புத்தகப்பை, வாட்ச் என இப்போது இந்த பர்த்டே கொண்டாட்டத்தில் வந்து நிற்கின்றது. இரண்டு நாளாக எப்போதும் பணம் எடுத்து வந்து தரும் மாரிப்பண்ணனை காணவில்லை என்று நேற்று சித்ராவே வேடசந்தூருக்கு பணம் எடுக்க போனாள். திரும்பி வருகையில் ஒரு பேக்கரியில் கேக் விலைகளை விசாரித்துக்கொண்டாள். கேக், புது ட்ரெஸ், யாரவது வந்தால் அவர்களுக்கு திண்பண்டம் என எப்படியும் ஒரு இரண்டாயிரம் செலவாகிவிடும் போலிருக்கின்றது. எங்கு எதை குறைக்கலாம் என பேருந்தில் யோசித்தபடியே வந்தாள். எதுவுமே தோன்றவில்லை. கடன் கேட்கலாம். கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதை எப்போது திருப்பி தருவது?

அம்மா வைத்த டீயை குடித்து முடித்தவள், எழுந்து குளிக்கப்போனாள். நாளை வேறு திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டும். ஸ்போர்ட்ஸ் மீட். ஒரு காலத்தில் சித்ராவுக்கு ஸ்போர்ட்ஸ் மீட் என்றால் ஒரு மாதத்துக்கு முன்பே உற்சாகம் தொடங்கிவிடும். குறுகுறுப்பான பையன்களின் கண்கள், அதட்டும் பி.டி. சார்கள், எல்லாவற்றையும் விட, வெல்லும் போது கிடைக்கும் கைத்தட்டு என அது வேறு ஒரு உலகம். இப்போதெல்லாம், மாணவர்களை அழைத்துச்செல்லும் பதட்டம் மட்டுமே. மேலும் இவ்வாறு சென்றால் எப்படியும் திரும்பி வர இரவாகிவிடும். பால் எடுத்துச்செல்ல முடியாது. யாரையாவது அதற்கு கெஞ்ச வேண்டும். முதல் முறை ஹெச்.எம். இவளை பழனிக்கு ஒரு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்று வர சொன்னபோதே தயங்கினாள். மேல் ஸ்டாப் யாரையும் அனுப்பலாமே சார் என்றாள் தணிவான குரலில். யம்மா யார அனுப்பனும் அனுப்பக்கூடதுனெல்லாம் நான் தான் முடிவு பண்ணணும் நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என அந்த கிழவர் சீறினார். இதே ஆள் இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் நியாபகத்துக்கு வந்தன. சித்ரா பேசாமல் வெளியே வந்துவிட்டாள். இப்போது எல்லாம் பழகிவிட்டது. மதிய உணவு வேளைகளில் இவள் தனியாக அமர்ந்து சாப்பிடும் போது, ஓரக்கண்ணால் இவளைப் பார்த்துக்கொண்டே இவளைப் பற்றி பேசப்படும் கிசுகிசுப்புகள் அலுத்துவிட்டன.

கண்மணியை பஸ் ஏற்றிவிட்டு, சித்ரா பள்ளிக்குள் நுழைந்த போது மணியடிக்க இன்னமும் நேரம் இருந்தது. நேராக அலுவலகத்திற்குள் நுழைந்தவள், சரவணன் சார் சீட்டுக்கு போனாள். அவர் ஒரு வகையில் இவளுக்கு சிற்றப்பா முறை ஆகின்றது. கொஞ்சம் கனிவானவர். அவசரத்திற்க்கு கை மாற்று வாங்குவதெல்லாம் அவரிடம் தான். இவளை பார்த்ததும் என்ன என்பது போல பார்த்தார். ‘சார், ஒரு ரெண்டாயிரம் வேணும். ஒண்ணாம் தேதிக்கு மேல தந்திடறேன்’ என்றாள். ‘ரெண்டாயிரமா? என்னம்மா மாசக்கடசி அதுவுமா? எதும் பிரச்சனையா?’ என்றார். ‘இல்ல சார். பாப்பாக்கு பொறந்தநாள் வருது. புது ட்ரெஸ் வேணும்னு ஒரே அடம் அதான்’ என்றாள். ‘இந்த காலத்து பிள்ளைகளே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டவர், உள் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் தாள்களை எடுத்தார்.

மாலை வீட்டுக்குள் நுழைந்த போது நிம்மதியாய் இருந்தது. பீரோவை திறந்து காசை வைத்தவள், புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கண்மணி பஸ்சில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது. அவள் உள்ளே வந்ததும், ‘கிளம்பி ரெடியா இருடி. போய் உன் ப்ர்த்டேக்கு ட்ரெஸ் எடுத்திட்டு கேக் ஆர்டர் கொடுத்திட்டு வரலாம்’ என்றாள். கண்மணி முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் தலையை குனிந்து கொண்டே உள்ளே போனால். சித்ராவிற்கு கண்கள் சிவந்தன. பால் கேனை வேகமாக தூக்கி சைக்கிளில் வைத்து கயிறை இறுக்கினாள். சொசைட்டியில் இருந்து திரும்பிய போது, அம்மாவும் கண்மணியும் வாசலில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. கண்மணி அவளுக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண பிராக்கை அணிந்திருந்தாள். இவள் முகம் கழுவி பொட்டிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு, ‘உம் வா போலாம்’ என்றாள். கண்மணி அப்போதும் ஒன்றும் பேசமால் எழுந்து கொண்டாள். இருவரையும் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். சென்னை சில்க்ஸில் கூட்டமாய் இருந்தது. சித்ராவிற்கு பிடித்த எதுவும் கண்மணிக்கு பிடிக்கவில்லை. கண்மணிக்கு பிடித்தது எதுவும் சித்ராவின் விலையில் இல்லை. ஒரு வழியாய், ஆயிரம் ரூபாயில் ஒரு மஞ்சள் சொக்காயை இறுதியாக கண்மணி எடுத்துக்கொண்டாள். வெளியே வந்த போது சித்ராவிற்கு விலை சற்று அதிகம்தான் என்று தோன்றியது. அன்று பார்த்த பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டு வந்த போது மணி 9ஐ நெருங்கியிருந்தது. மேற்குத்தெருவில் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் படுத்திருந்தவர்களெல்லாம், ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி இவளையும், கண்மணியையும் பார்த்தார்கள். யாரும் எதும் கேட்கவில்லை. சித்ரா, கண்மணியின் கையை பிடித்துக்கொண்டு வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

கண்மணியின் பிறந்தநாளுக்கு ஒரு ஏழெட்டு பேர் வந்திருந்தனர். அவள் நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டும் என்றதை சித்ரா முடியாது என்றுவிட்டாள். குழந்தை எந்த உற்சாகமும் இன்றி கேக்கை வெட்டி விட்டு, சம்பிரதாயமாக எல்லோருக்கும் ஒரு துண்டு கொடுத்தாள். சித்ராவின் அம்மா, சேலையில் முடிந்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை பேத்தியின் நெற்றியை வழித்து கையில் திணித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம், கண்மணி உள்ளே சென்று படுத்துக்கொண்டால். சாலையூர் பெரியப்பா கிளம்பியவுடன் உள்ளே வந்து விளக்கை போட்ட சித்ரா, ‘இந்தாடி, ஏன் இந்நேரத்திலேயே படுத்து கிடக்க. எந்திரி சாப்புட்டு படுப்பியாம்’ என்றாள். கண்மணி ஒன்றும் பேசவில்லை. முதுகு மட்டும் குலுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. திருப்பியவள், கண்மணியின் கண்ணீரைப்பார்த்து அதிர்ந்தாள். ‘என்னடி என்னாச்சு?’ என்றபடியே கழுத்தை தொட்டுப்பார்த்தாள். ‘விடு என்ன… போ இங்கிருந்து’ என்று திமிறினாள் கண்மணி. ‘என்னடி’ என்று அதிர்ச்சியாய் பார்த்தாள் சித்ரா. ‘என்ன ஏன் இப்படி அவமானப்படுத்தற… உன்ட நான் இப்படியே பர்த்டே வேணும்னு கேட்டேனா. சிவாலாம் சாக்லேட் கேக் கட் பண்ணான் தெரியுமா… உன்ன யாரு வெணிலா வாங்க சொன்னது. நாளைக்கு ஸ்கூல் போன என் ப்ரெண்ட்ஸெல்லாம் சிரிப்பாங்க’ என்றபடி கேவினாள். சித்ராவிற்கு யாரோ செவுளில் அரைந்தது போலிருந்தது. ‘என்னால இவ்வோளோ தான்டி முடியும் இதுக்கே என்ன பாடு படறேனு எனக்குத்தான் தெரியும்’ என்றாள் சித்ரா. ‘எங்கப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா, உன்ன யாரு எங்கப்பா விட்டு வர சொன்னா’ என்று கத்தினாள் கண்மணி. சித்ராவுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. பட் பட்டென்று குழந்தையை அடித்து தீர்த்துவிட்டாள். ‘அய்யோ கொல்றாளே… நான் எங்கப்பாட்ட போறேன் என்ன விடு விடு’ என்று கத்தினாள் கண்மணி.

காலையில் எழுந்த போது, கண்மணி எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நேற்றிரவு நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வந்தது. வாஞ்சையாய் குழந்தையை கட்டிக்கொண்டாள். ‘விடு நான் அப்பாட்ட போகனும்’ என்று முனகினாள் கண்மணி. ‘போயேன் யார் வேண்டாம்னா’ என்றபடி வெடுக்கென்று எழுந்தாள். பால் பீச்சி வந்தபோது வாசலில் கண்மணி கையில் செல்போனுடன் நிற்பது தெரிந்தது. ‘அப்பாவுக்கு போன் பண்ணிக்கொடு’ என்றாள் இவளைப்பார்த்தவுடன். இவள் ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். கண்மணி பின்னாலே போன் பண்ணிக்கொடு என்றபடியே வந்தாள். சித்ராவுக்கு ஆத்திரமாய் வந்தது. போனை பிடுங்கி சங்கரின் நம்பரை டயல் செய்து கண்மணியிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்டு அவள் ‘அப்பா’ என்று கத்தியபடி வெளியே ஓடினாள். அன்று பள்ளியில் ஒரு வேளையும் ஓடவில்லை. இத்தனை கஷ்டப்பட்டது அத்தனையும் வீணா எனத்தோன்றியது. எல்லோரும் சொல்வது போல கணவனுடன் வாழத்தெரியவில்லை. இப்போது பெற்ற பிள்ளையையும் வளர்க்க தெரியவில்லை. எதற்கு தான் பிறந்தோம் என ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மாலை வீட்டுக்கு வந்த போது சாலையூர் பெரியப்பா வந்திருந்தார். ‘சங்கர் போன் பண்ணாம்மா, கண்மணிய பாக்கனுமாம்’ என்றார். ‘வந்து பாத்திட்டு போகச்சொல்லுங்க பெரியப்பா நான வேண்டாகிறேன்’ என்றாள் கோபமாக. ‘அதில்லமா அவன் வர முடியாதாம். பாப்பாவ கூட்டிட்டு வர சொன்னான். அதும் குழந்தை ஆசப்பட்டதால தானாம்’ என்றார். கண்மணி முன்பே கிளம்பி ரெடியாய் இருப்பது தெரிந்தது. சித்ரா கண்ணீருடன் உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இரவு ஓரிரு முறை அம்மா சாப்பிடக்கூப்பிட்டது மட்டும் லேசாய் கேட்டது. விழிப்பு வந்த போது, கண்மணி அருகில் படுத்திருப்பது தெரிந்தது. கண்ணில் கண்ணீர் பொங்க மகளை அணைத்துக்கொண்டாள். எப்போது வந்தாள், எப்படி வந்தாள்? மெலிதாய் அவள் நெற்றியை வருடியபடி நீண்ட நேரம் படுத்திருந்தாள். அலாரம் அடித்த போது அம்மா அறைக்குள் எட்டிப்பார்த்தாள். இவள் விழித்திருப்பதை பார்த்ததும், ‘அங்க போய் கொஞ்ச நேரத்துலையே அம்மாட்ட போகனும்னு ஒரே அழுகையாம். பதனோரு மணி போல உம்மாமனாரு கொண்டு வந்து விட்டுட்டு போனாரு’ என்றாள். எழுந்து வெளியே வந்த சித்ராவுக்கு, இன்னும் ஒரு மாதத்தில் அம்மன் கோவில் கொடை வருகிறது என்று நியாபகம் வந்தது. கண்மணிக்கு மரகதப்பச்சையில் ஒரு பாவாடை சட்டை எடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். கண்மணிக்கு பச்சை பிடிக்காது என்பதும் ஏனோ நினைவுக்கு வந்தது. சித்ரா இன்னொரு நாளுக்கு தயாரானாள்.

காதல் கடிதம்!

சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த வயதான காலத்தில் யாருக்கு எழுதுவது? அப்படியே எழுதினாலும் இந்த காலத்துப்பெண்கள் கடுதாசியையெல்லாம் மதிப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் முக்கியமானது முன் பின் தெரியாத பெண்ணுக்கு என்னவென்று கடிதம் எழுதுவது? பிரபஞ்சன் எழுதும் கடிதங்கள் சுமாராக பதினைந்து பக்கங்கள் வருமாம். ஆனால் பதினைந்து பக்கத்துக்கு என்ன எழுதினார் என்று தெரியவில்லை. கவிதைகள் எழுதலாம், ஆனால் பொய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. செயற்க்கை அறிவை பற்றியோ, சிசிலியன் டிபன்ஸ் பற்றியோ எழுதலாம் ஆனால் செருப்படி வாங்கும் உத்தேசமும் இல்லை.

கல்லூரி காலத்தில் காதல் கடிதம் போன்ற ஒன்று எழுத வாய்ப்பு கிடைத்தது. நண்பன் ஒருவன் வகுப்பு பெண் ஒருவருடன் நல்ல நட்பில் இருந்தான். அவன் அப்பெண்ணை காதலிக்கிறான் என நண்பர்கள் நாங்கள் கிண்டல் செய்வோம். அவனோ, ஒரு வெட்கத்துடன் சும்மா இருங்கடா என்று ஓடி விடுவான். அவன் ‘உம்’ என்றால் அந்த பெண்ணிடம் போய் பேச நாங்கள் தயாராய் இருந்தோம். ஆனால் ‘உம்ஹும்’ தான் வந்துகொண்டிருந்தது. ஒரு முறை லேப்பில் ஏதோ பரிசோதனை செய்யும் போது ஒயரை சீவுகிறேன் என்று கையை சீவிக்கொண்டேன். வந்த ரத்தத்தை ஏன் வீணாக்குவானேன் என்று ஒரு தாளில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதி வைத்துக்கொண்டேன். அந்த நண்பனிடம், ரத்ததில் எழுதிய தாளை அந்த பெண்ணிடம் நீ தான் எழுதியதாக கொடுத்துவிடுவோம் என்று மிரட்டி வைத்து இருந்தோம். அவனும் பயந்து கொண்டு டீ, வடை என்று ஸ்பான்ஸர் செய்து கொண்டிருந்தான். அடுத்த கட்டமாக திரைப்படம் ஒன்றுக்கு அழைத்துப்போக சொல்ல இம்முறை கொடுக்கறதுனா கொடுத்துக்க என்றுவிட்டான். மனம் தளராத நண்பன் ஒருத்தன் என்னிடம் ‘நீ அந்த பேப்பரக்கொடு, நான் கொண்டுபோய் கொடுக்கறேன்’ என்றான். பர்ஸில் இருந்து பேப்பரை எடுத்து விரித்தால், எழுதிய எழுத்துக்களை காணோம். அன்று கற்று கொண்ட பாடம் ரத்தத்தில் எழுதிய கடிதம் எவிடன்ஸ் ஆகாது!

பாடல்… பரிபாடல்!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் “மறுவார்த்தை பேசாதே” பாடலில் “முதல் நீ.. முடிவும் நீ! அலர் நீ.. அகிலம் நீ!” (அலருக்கு அர்த்தம் தெரியுமோ? அலர்மேல் மங்கையை தெரியுமோ?) என்ற வரிகள் கேட்ட நாள் முதலாய் பரிச்சயாமாய் தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. இன்று பிரபந்த பாடல் ஒன்றை வலை(யில்!) வீசி தேடிக்கொண்டு இருக்கையில் தற்செயலாய் பரிபாடல் வரிகள் கண்ணில் தட்டுப்பட்டது. பரிபாடல் சங்க நூல். எழுதியவர்கள் மதுரைகாரர்களாய் இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை போன்ற மதுரையை சுற்றி உள்ள இடங்களும் கடவுள்களுமே பாடப்பட்டு உள்ளனர். 25 முதல் 400 அடிகள் வரை உள்ள இதன் பாடல்கள், பொதுவாக ராகம் போட்டு பாட ஏதுவாய் எழுதப்பட்டவை. இதன் தாக்கம் பின்னர் எழுதப்பட்ட பிரபந்தம் மற்றும் திருவாசகத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர். இதில் திருமாலை பற்றிய மூன்றவது பாடலில் 65வது வரியில், கண்டேன் சீதையை போன்று அறிந்தேன் தேடியதை. இவை தான் அவ்வரிகள்:

வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தின் உட்ப்பொருளும் நீ…

(முழுப்பாடலை இங்கே பார்க்கலாம்: http://bit.ly/2rlKqEZ)

ஒவ்வொரு பாடலின் முதலிலும் எழுதியவர் பெயர், இசை அமைத்தவர் மற்றும் பண் (ராகம்) குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்கள் பாலையாழை சுட்டுகின்றன. அரிதாய், நோதிறம், காந்தாரம் போன்றவை. இவை தற்காலத்தில் எந்த ராகத்தை குறிக்கின்றன என்று தெரியவில்லை (யாரேனும் ஆராயலாம்!) ஆனால், இப்போதும் இப்பாடல்களை இசைத்துக்கேட்டால் நன்றாய் தான் இருக்கும்!

காற்று வெளியிடை அனுபவம்

காற்று வெளியிடையின் இரண்டு ப்ளஸ்கள், ஹீரோயின் அதிதியும் கேமராமேன் ரவிவர்மனும்! இரண்டு மிகப்பெரிய மைனஸ்கள் ஹீரோ கார்த்தியும், ஆழமில்லாத திரைக்கதையும்.

தன் பெரிய ப்ரௌன் கண்களால் ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் அதிதி. கோபம், காதல், தவிப்பு, நடனம் என நடிப்பில் வசீகரிக்கிறார். மணிரத்தினம் படங்களின் ஹீரோக்கள் உணர்ச்சிகரமானவர்கள். ஆனால் கார்த்தியின் முகத்தில் ஒரு இழவும் வருவேன என்கிறது. ‘வான் வருவான்’ பாடலில் நொடிக்கு நூறு பாவனைகளாக அதிதி அசத்த கார்த்தி தேமே என நிற்கிறார். ஒரு இடத்தில் இவனையா லவ் பன்ற என்று அதிதியை பார்த்து கேட்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. கார்த்தி வாயை கோணியபடி ரொமான்ஸ் பண்ணும் போதெல்லாம் நமக்கும் அந்த கேள்வியை கேட்க தோன்றுகிறது. சரி கிளைமாக்ஸிலாவது எதாவது செய்வார் என பார்த்தால், மணிரத்தினமே ‘நீ நடிச்ச வர போதும் அப்படி ஓரமா நில்லு, அந்த பொண்ணு பாத்துக்கும்’ என்றுவிட்டார். (இருந்தாலும் கண்ணீர வழிய அந்த குழந்தையை பார்க்கும் இடம் கிளாசிக்!)

ரவிவர்மனின் ப்ரேம்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ப்ரெஷாக கலர்ஃபுல்லாக இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய குறை எந்த இடத்திலும் ஒன்ற முடியாதது. தனி தனி சீன்களாக பார்க்கையில் நன்றாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாய் பார்க்கையில் அழுத்தம் இன்றி தட்டையாய் முடிகிறது. இந்த படத்துக்கு எதற்க்கு ஆர்.ஜே.பாலாஜி? அவரை வேறு சில சமயம் குளோஸப்பில் காட்டி பயமுறுத்துகிறார்கள். எதற்க்கு டெல்லி கணேஷ்? ஏன் எதற்கென்றே தெரியாமல் கார்த்தியின் குடும்பமாக ஒரு கூட்டமும், அதிதியின் அம்மா அப்பாவாக இருவரும் வந்து போகிறார்கள். அதென்னமோ மணிரத்தனம் பட ஹீரோக்கள் பச்சை தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் அம்மா மட்டும் வட இந்திய முகமாக தெரிகிறார். (அந்த தங்கச்சி… ஓக்கே!!!)

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என சுற்றி ஒருவழியாய் படத்தை முடிக்கிறார்கள். (சர்வதேச எல்லையில் ஒரு டபரா லாரியை வைத்துக்கொண்டு, பெட்ரோல் குண்டு வீசி பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தப்பிப்பதெல்லாம் செம போங்கு!) க்ளைமேக்ஸில் அந்த குழந்தையும் அதற்கான ஸவுண்ட் இன்ஜினியரிங்கும் (ஶ்ரீநிதி) பிரமாதம்.

மணிரத்தினத்தின் ரசிகர்களும், அதிதியை பார்க்க விரும்புவர்களும் (கார்த்தியின் இன்ட்ரோ சீனை விட அதிதியின் அறிமுகத்துக்குத்தான் தியேட்டரில் விசில் பறக்கிறது!) தியேட்டருக்கு போகலாம். மற்றவர்கள் தமிழ்பாறையின் HDக்கு காத்திருக்கலாம்!

நெடுஞ்சாலை விளக்குகள்

ப.க.பொன்னுசாமியை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. P.K. பொன்னுசாமி என்றால் பாரதிதாசன் பல்கலை இயற்பியல் துறையில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு (முதல் மாடி செமினார் ஹால் புகைப்படம்!) — துறையின் முதல் தலைவர் அவர். கல்வியாளர்கள் அவரை சென்னை மற்றும் மதுரை பல்கலை துணைவேந்தராக அறிந்து இருக்கலாம். 90களின் மத்தியில் செய்தித்தாள் படித்தவர்கள், இந்தியாவையே உலுக்கிய ராகிங் கொலையான நாவரசின் தந்தையாக அறிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவரை எழுத்தாளராக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவரின் இரண்டாவது நாவல் ‘நெடுஞ்சாலை விளக்குகள்’. (முதலாவது படுகளமாம்!) 60களில் சென்னை பல்கலைகழகத்துக்கு ஆய்வு மேற்க்கொள்ள செல்லும் கோவையை சேர்ந்த ஒரு மாணவன் சந்திக்கும் சூழலும், உலக புகழ் பெற்ற ஒரு விஞ்ஞானி எப்படி அரசியல் அழுத்தங்களால் சிதைக்கப்படுகிறார் என்பதுமே கதையின் மையம். இதை தமிழ் சினிமா போல இரண்டு காதல்கள், அதனால் ஏற்படும் குழப்பங்கள், காதலன் 1ன் குடும்பம், அதன் சூழல், காதலன் 2ன் குடும்பம், அதன் சூழல், காதலி 1ன் குடும்பம், அதன் சூழல், காதலி 2ன் குடும்பம், அதன் சூழல், அப்புறம் அந்த விஞ்ஞானியின் குடும்பம்ம்ம்ம்… இவ்வாறாக சலித்து, அரைத்து, ஊற்றி எடுத்து தோசையை… சே… கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

கதாநாயகன் செல்லமுத்து (PKP?) பற்றி ப்ரதாபங்கள் ஒன்றும் இல்லை. ஆனால், அந்த விஞ்ஞானி — ராமசந்திரன் வரைபடம் என்று உயிர் இயற்பியலில் அறியப்பட்ட கண்டிபிடிப்புக்கு சொந்தகாரரான G.N. ராமச்சந்திரன் (கதையில் அனந்தமூர்த்தி) — பற்றி ப்ரதாபிக்க அனந்தமுண்டு. எர்ணாகுளத்தில் பிறந்த தமிழரான ராமசந்திரன் திருச்சி புனித வளனர் கல்லூரியிலும் பின் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்திலும் தன் மேற்படிப்பை முடித்தார். சர். சி. வி. ராமனின் வழிகாட்டுதலில், படிக வளர்ப்பில் தன் ஆய்வை மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். பின் சென்னை பல்கலைகழகத்தில் பணிக்கு சேர்ந்து, உயிர் இயற்பியலில் ஒரு முக்கிய பகுதியான புரத படிக வளர்ப்பில் ஆய்வு பணிகளை மேற்க்கொண்டார். கதை, அவரின் முக்கிய பங்களிப்பான ராமசந்திரன் வரைபடம் கண்டுபிடிப்பிதற்க்கு சற்று முன் தொடங்கி, அவர் உடல் ரீதியாக முடங்குவதுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்தி எதிர்ப்பு போராட்டம், அண்ணா முதலைமைச்சர் ஆவது, அது பல்கலை துணைவேந்தர் மாற்றமாக பரிமாணிப்பது, அரசின் அரசியல் சார்ந்த பிராமணிய எதிர்ப்பு எப்படி ஒரு நேர்மையான பிராமண விஞ்ஞானியை (G.N. ராமச்சந்திரன்) பாதிக்கிறது, எப்படி ராமச்சந்திரனின் மாணவனே சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவருக்கு எதிராக மாறுகிறான் என்பதாக, பல ஊடுபாதைகளில் கதை விரிகிறது.

இணைகோட்டில், வரும் செல்லமுத்து இந்தி எதிர்ப்பு போராட்டதில் கலந்து கொள்கிறான். தமிழ் பட கதநாயகன் போல இயன்றோர்க்கு உதவுகிறான். அப்புறமும் நேரம் கிடைத்தால், காதல் செய்கிறான்! நாவலில் இந்த மாணவர் பகுதி எதற்கென்றே தெரியவில்லை. இதை தவிர்த்து, ராமச்சந்திரனை மட்டும் மையப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Writer’s bias என்று ஒன்று உண்டு. எழுத்தாளான் தான் கண்டதை சொல்லாமல் காண விரும்பியதை சொல்வதாக அதை பொருள்கொள்ளலாம். இளமை துள்ள(!) சொல்ல வேண்டும் என நிதர்சனத்தை மறந்துவிட்டிருக்கிறார் எழுத்தாளர். 60களில் பெண்கள் படிக்க செல்வதே எவ்வளவு பெரிய விஷயம்? அதிகமாக பெண்கள் படிக்க வரதா அந்நாட்களில் வேற்றூருக்கு கல்வி கற்க வந்த பெண்கள் சந்தித பிரச்சனைகள், சவால்களை சொல்லியிருந்தால் பெண்கள் பற்றி அப்போதைய சமூகத்தின் குறுக்குவெட்டு தோற்றம் இந்நாளைய வாசகருக்கு கிடைத்திருக்கும். ஆனால் கதையில் பெண்கள் சாதரணமாக பஸ் ஏறி நண்பனின் வீட்டுக்கு செல்கிறார்கள், ஹோட்டலுக்கு போய் உறங்குகிறார்கள், பெண்ணின் பெற்றோர், பெண்ணுக்கு பிடித்திருக்கிறதா, அந்த மாப்பிள்ளைக்கே கட்டி வைப்போம் என்கிறார்கள், அப்புறம் பெண் ‘ம்ஹும்.. இவன் இல்ல நான் அவனை தான் விரும்பறேன்’ என்றாதும் ‘அடடா.. நானும் அதே தான் நினைச்சேன்.. அவனையே பேசி முடித்திருவோம்’ என்கிறார்கள். மெய்யாலுமே அப்படித்தான் என்றால் ஆச்சரியம் தான்.

கதையின் இடையே வரும் ஆசிரியரின் சொந்த அனுபவங்கள்/கருத்துக்கள் முக்கியமானவை. “நல்ல வழிகாட்டிட ஆய்வுக்கு சேந்த 3–4 வருசத்துல முடிக்கறதோட மாணவனுக்கு வெளிநாடு போகவெல்லாம் வாய்ப்பு கிடைக்கும். இதுவே திறமை இல்லாத ஆளுனா செத்த பாம்பை அடிக்கற மாதிரி தான். பயனில்லாத ஆராய்ச்சியை பண்ணிக்கிட்டு, 7–8 வருசத்த வீணடிக்கறதோட, வேலையும் கிடைக்காம பைத்தியமா திரியனும்.” “இந்த வழிகாட்டி-மாணவர் உறவுக்கு இலக்கணமே சொல்ல முடியாது, சிலருக்கு கடைசி வரை நல்ல இருக்கும், பெரும்பாலனவங்களுக்கு கொடூரமாய் போயிரும். இவருக்கு ஒன்னுமே தெரியலையேனு புலம்பற மாணவர்களையும், இந்த மக்க மாணவனா எடுத்திட்டேனேனு புலம்பற வழிகாட்டிகளையும் அதிகமா பார்க்கலாம்.” “ஐந்தாறு ஆண்டுகள் அடிமையாக வேலை செய்து, வழிக்காட்டிக்கு சிறு சிறு செலவுகளை எல்லாம் செய்து அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி தவிர்பவர்களை என்னவென்பது? ‘பாவம், கொடுமை என்று சப்பு கொட்ட வேண்டிதான். ‘விவாதம், விவாதம்’ணு அதிகப்படியான் நெருக்கத்தை உண்டாக்கும் விதத்தில் நடந்துக்கொள்ளும் வழிகாட்டிகளை மாணவிகள் சமாளித்தாக வேண்டும்.” என்பதாக நிஜங்களை புட்டு புட்டு வைக்கிறார்!

நாவலின் முக்கிய வில்லன் ரங்கநாதன். மற்றவர்களுக்கெல்லாம் மாற்று பேர் யோசித்த ஆசிரியர் இவரை மட்டும் நிஜ பெயரிலேயே உலாவ விட்டுள்ளார். தனிப்பட்ட விதத்திலும் PKPக்கு ரங்கநாதன் மேல் கோபம் போல. அவர் சென்னை பல்கலையின் துணைவேந்தரான போது ரங்கநாதனின் ஒய்வுகால பலன்கள் கிடைக்க செய்யாமல் தடுத்ததாக தெரிகிறது. நாவலிலும் ரங்கநாதன் திறமை அற்றவராக, GNRன் நிழலில் ஒதுங்கியவராக, தன் மாணவியிடமே தவறாக நடந்துகொள்ளும் காமுகனாகவே சுட்டப்படுகிறார். நிஜம் எப்படியோ!

புதிய துணைவேந்தர் பதவியேற்றவுடன், G.N. ராமச்சந்திரன் அரசியல் அழுத்தங்களால் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்திற்க்கு செல்கிறார். ரங்கநாதன் சென்னையில் துறைத்தலைவராய் ஆகிறார். ராமச்சந்திரன் பெங்களூரில் குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சி பணிகளை செய்த போதும், அவருடைய ஆய்வு ஆர்வமே மனநல பாதிப்பாக மாறி அவரின் உடல் நிலையை பாதிக்கிறது என்பதாக நாவல் முடிகிறது. (காதல் கதை முக்கோண, நாற்கோண, அறுகோண காதலாய் எல்லாம் மாறி, நம்மையும் அறுத்து, அவன் 1க்கு அவள் 2, அவன் 2க்கு அவள் 3… இவ்வாறாக சுபம்!)

ஒரு ஆய்வு கூடத்தில் நடக்கும் நிகழ்வுகள் (புதன்கிழமை செமினார் எல்லாம் வருகிறது!), அதன் சிறுவட்ட — ஆனால் தவிர்க்க முடியாத — அரசியல், ஆய்வு பணிகள் — பாணிகள், ஆய்வு மாணவர்களின் சூழல் என்று உண்மையை வெகு நெருக்கமாக சொன்ன விதத்தில் நாவல் கவனத்தையீற்கிறது! ஒருமுறை முயற்ச்சிக்கலாம்.

நூல் விவரம்:
தலைப்பு: நெடுஞ்சாலை விளக்குகள்
ஆசிரியர்: ப.க.பொன்னுசாமி
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை
தொலைபேசி: 26251968, 26359906, 26258410

புலிக்கலைஞனுக்கு ஓர் அஞ்சலி

நாம் ஒருபோதும் பார்த்திடாத சிலரின் மறைவு, ஏன் இவ்வளவு வருத்தத்தை தருகின்றது என்று தெரியவில்லை. அசோகமித்திரன் எனக்கு மிக பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அனேகமாக, கேளிக்கை, வணிக எழுத்துக்கள் தாண்டி, தமிழில் நான் படித்த முதல் இலக்கியம் சார்ந்த தீவிரமான படைப்புகள் அசோகமித்திரனுடயது. அவரின் ‘18வது அட்சக்கோடு’ ஒன்று போதும் அவரின் ஆளுமையயும், படைப்புத்திறனையும் அறிவதற்க்கு. சாதரான மனிதர்களைப் பற்றி எழுதிய அசோகமித்திரன், மிக சாதரணமாகவே வாழ்ந்தார்.

தந்தையின் மறைவுக்குப்பின், (இந்திய சுதந்திரத்துக்கு பின் என்றும் சொல்லலாம்) ஹைதராபாத்தில் இருந்து, சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம் அவருடையது. எஸ். எஸ். வாசனின் ஜெமினியில் பணிபுரிந்து (சின்ன சின்ன எடுபிடி வேலைகள்) கொண்டு இருந்தபோதே, அவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளிவர தொடங்கிவிட்டது. அவருக்கு என்றேனும் ஜெமினியின் கதா இலாக்காவுக்கு மாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முரண்நகையாக வாசன் ஒருபோதும் அசோகமித்திரனின் மேதமையை உபயோகபடுத்திக்கொள்ளவில்லை. ஒருமுறை தன் காரை வாசன் துடைக்கச்சொல்ல, ஒரு எழுத்தாளான் இதை செய்வதா என, அங்கிருந்து வெளியேறிய அவர் பின் ஒருபோதும் வேறு ஒரு நிறுவன பணிக்குச்செல்லவில்லை.

வாழ்வதற்க்கு என சில சின்ன சின்ன வேலைகள் செய்தும், சில சமயங்களில் அப்பளம் விற்று இருந்தாலும், நம்பி வந்த எழுத்து, பல சமயங்களில் அவரை காப்பாற்றியது. ஆங்கில இதழ்களில் வந்த அவரது எழுத்துக்கள், தகுந்த சன்மானத்தையும் சேர்த்து சுமந்து வந்தன.

ஒரு சில விருதுகள் அவரால் பெருமை பெற்றன. ஆனாலும், இந்திய அளவில் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கருதப்பட்ட — அவரின் மேதமைக்கு தகுந்த புகழ் அடையவில்லை என்பதே நிதர்சனம். அதைப்பற்றி அவரும் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்திய தடம் இதழில் கூட விருதுகள் பற்றிய கேள்விக்கு, ‘நிறைய தகுதியான எழுத்தாளர்கள் இருக்கும் போது, விருதுங்கறது கூட லாட்ரி மாதிரிதான். பத்தில் யாரோ ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். எனக்கு கிடைக்கலங்கறதுக்காக, யாரையும் குறை சொல்லமுடியாது’ என்றிருந்தார். இன்னும் ஒரு பத்தாண்டுகளாவது என்ற அளவில், தொடர்ந்து எழுதி வந்த அவரின் மறைவு, சந்தேகம் இன்றி தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு. ஆனாலும், அவரின், ரகு’களும், அவர்களின் அம்மாக்களும், இரண்டு பக்கமும் எதிர் காற்று அடிக்கும் டங் பண்டு ரோடும், மீனம்பாக்கத்தில் வெடித்த குண்டும், ஜெமினிக்கு வந்த புலிக்கலைஞனும், ஒரு போதும் மறக்கப்படமாட்டர்கள்!

International Mother Language Day

Today is ‘International mother language day’. The objective of such a celebration is to promote multilingualism and to ensure the right to write in our ‘own’ language. It is time to understand that a language is nothing but a reflection of your life and when you loosing your language you are loosing your identity. So respect your language and save your (our) language.

தமிழர்களாக, இரண்டு விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது தமிழுக்கு கலைச்சொற்களை சேர்த்தல். அலைபேசியில் இருந்து முகநூல் வரை நம்மிடம் தமிழ்ச்சொற்கள் இருப்பினும் அறிவியல் என்று வரும் பொழுது திணறுவதை பல முறை உணர்ந்து இருக்கிறேன். எனவே அது சார்ந்த முயற்ச்சிகள் உடனடியாக தேவை.

குறிப்பாக விக்கிபீடியா போன்ற தளங்களில் அறிவியல் கட்டுரைகளை சரியான கலைச்சொற்களுடன் மொழிபெயர்த்தல், நல்ல பலனை தரும் என்று நம்புகிறேன். அடுத்த வருடம் இதே தினத்துக்குள் ஒரு 25 கட்டுரைகளையாவது தமிழ் படுத்திவிடவேண்டும் என்றுள்ளேன். பார்க்கலாம்.

இரண்டாவது, நம் பெருமையை உலகுக்கு சொல்வது. வேற்று மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் அளவுக்கு, தமிழில் இருந்து வெளியே செல்வதில்லை என்பது படைப்பாளிகளின் பல ஆண்டு குற்றச்சாட்டு. அது குறித்தான விவாதங்கள் வழுப்பெறவேண்டும். தரமான பிறமொழி மொழிபெயர்புகள் வெளிப்படவேண்டும். இருக்கும் நிலை விரைவில் மாறும் என நம்புவோம்.

தமிழ் வாழ்க!

ஜல்லிக்கட்டு — சில புரிதல்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் இப்போது ஒரு குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. ஆளுக்கு ஆள், வா வீட்டுக்கு போலாம் என்றோ, நீ வேண போ நான் நிரந்தர சட்டம் வராம வரமாடேன் என்றோ குழப்(ம்)பிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களும், ஜல்லிக்கட்டுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த இராஜசேகரன், சிவசேனதிபதி போன்றோர் போதும் என்கிறார்கள்.

இவர்களில், அரசியல்வாதிகளுக்கோ, ஜல்லிக்கட்டை தவிர்த்து பிற காரியங்களுக்காக போராட்டம் தொடர்ந்தால் தலைவலி. விவசாய பாதுகாப்பு, மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை போன்றவற்றை கூட விடுங்கள், PETAவுக்கே அவர்களால் தடை வாங்க முடியாது என்பது தான் நிதர்சனம். ஜல்லிக்கட்டுக்காக இத்தனை ஆண்டுகளாக போராடியவர்களை பொருத்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடியது இச்சட்டம். இது அவர்களுக்கு படத்தின் முடிவாகவும் இருக்கலாம் அல்லது, இடைவேளையாகவும் இருக்கலாம். ஒருவேளை நாளை இச்சட்டம் தொடர்பாக சிக்கல் வந்தாலும் மீண்டும் ஒரு போரட்டத்துக்கு அவர்கள் தயாரே. ஆனால் இதன் பொருட்டு அரசின் நெருக்குதல்கள் அவர்களுக்கு வேண்டாம்.

இதில் ஒப்புக்கொள்ள முடியாத ஒரே விஷயம், ஆதியின் ‘தேசத்துக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் சர்வ சாதரணமாக கேட்க கூடிய கோரிக்கை ‘எங்களை அத்து விடு’ என்பது தான். அதெல்லாம் உண்மையென்றால், தமிழ்நாடு என்றோ தனிநாடயிருக்கும். இந்த போராட்டம் தீவிரமடைவதற்க்கு முன்பு நடந்த பல அடையாள ஆர்பாட்டங்களிலும் கூட பலர், ‘எங்களை மதிக்காவிட்டால், தனிநாடுதான்’ என்று சலம்பிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுதெல்லாம், இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று ஆதிக்கு தோன்றாமல் போனது தான் ஆச்சரியம்.

எனக்கென்னமோ, அரசு சற்று பொறுமையாக, ‘இந்தங்கப்பா, நீங்க கேட்ட அவசரசட்டம். இத திங்கள்கிளம சட்டமன்றத்துல வச்சு சட்டமாக்கிறுவோம். இடையில நடத்தனும்னு நினைக்கிறவன், அனுமதி வாங்கிட்டு, இந்த இந்த நடைமுறைகளை எல்லாம் கடைபிடிச்சு நடத்திக்குங்க’ என்றிறுந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘நாந்தான் மாட்ட அவுத்துவுடனும்னு சின்னம்மா சொல்லுச்சு’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக விழா ஏற்பாடுகள் செய்யப்படவே தான் மக்கள் ‘நீ அவ்ளோ நல்லவன் இல்லையே’ என்றுவிட்டார்கள்.

இப்போராட்டம் குறித்து சில சமூக மற்றும் மானுடவியல் அறிஞர்களின் கருத்துக்களை கவனித்துப்பார்த்தால், இது ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே கூடிய கூட்டம் அல்ல என்பது தெரியவரும். விவசாய அழிப்பில் இருந்து, அரசியல்வாதிகளின் சுரண்டல், அண்டை மாநிலங்களின் வஞ்சம், இந்திய அளவில் அடையாளமழிப்பு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இதனை புரியாமல் தான், சிலர் வேலை முடிஞ்சிருச்சி நீ வீட்டுக்கு போ என்கிறார்கள். இதனை புரிந்து கொண்டதால் தான் அரசாங்கம், நாளைக்கு எல்லாரும் பள்ளிகூடத்திற்க்கு வந்திடுங்கப்பா என்கிறது.

ஜல்லிக்கட்டு — சில பதில்கள்

ஜல்லிக்கட்டு தொடர்பாக, பெரும்பான்மையான ஊடகங்களிலும், ஒரு சில சமூக ஊடக பதிவுகளிலும், இரண்டு கருத்துக்கள் சற்றே எள்ளலுடன் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதை காண்கிறேன். முதாலாவது, தலைமை இல்லாத இந்த போராட்டங்களால் ஒருங்கிணைந்த ஒரு வெற்றியை பெற முடியாது என்பது. இரண்டாவது, போராடும் பெரும்பான்மையானவர்கள், உணர்ச்சி வேகத்தில் போராடுகின்றார்களே தவிர அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்பது.

இந்தியாவில் தற்போது அரசியல் என்பதே, தேர்தல் அரசியல் வெற்றி தான் என்கின்ற சிந்தனையே, தலைவனை தேட சொல்கிறது. மாறாக ஒரு ஜனநாயக நாட்டில், தன் தேவைகளுக்காக, ஒரு சமூகம் போராடுவது ஏன் தேர்தல் நோக்கிலேயே இருக்க வேண்டும்? இப்போது போராடுபவர்கள் எந்த அதிகாரத்தையும் வேண்டி போராடவில்லை. அவர்களிடம் சில கோரிக்கைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி தரவேண்டி அதிகாரத்தில் இருப்பவர்களை நிர்பந்திக்கின்றனர். அவ்வளவே. ஒருவேளை அதிகாரங்கள், செவிடாகும் போது அது தானகவே மாற்று அரசியலுக்கு அவர்களை இட்டுச்செல்லும். இந்திய அரசியலே உணர்ச்சி மயமானது தான். இதில் பெரும்பாலான அரசியல்வாதிகளே அரசியல் அறிவோடா அரசியல் செய்கின்றனர்? இன்று எத்தனை தி.மு.க / அ.தி.மு.க உறுப்பினர்களால் திராவிட கொள்கைகளை பற்றி பேசி விட முடியும்? எத்தனை காங்கிரஸ்காரர்கள் குறைந்தபட்சம் காந்தியின் சத்தியசோதனையாவது படித்து இருப்பார்கள்? எத்தனை அரசியல் அறிக்கைகள் அறிவு பூர்வமாக வெளியிடப்படுகின்றன? இந்த நிலையில் போராடும் மாணவர்களும், இளைஞர்களும் மட்டும் தெளிந்த அரசியல் அறிவோடு இருக்கவேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?

மாறாக இதனை ஏன் ஒரு தொடக்கமாக நாம் கொள்ளக்கூடாது? ஏதோ ஒரு கிராமத்து பிரச்சனை என்று விட்டுவிடாமல், ஒரு மாநிலமே போராடுவது ஒரு மாற்றம் இல்லையா? தன்னிச்சையான ஒழுங்கோடு, தான் வீசிய குப்பைகளை தானே சேகரித்து பொறுப்பாக அகற்றுவது ஒரு முன்னுதாரன அரசியல் இல்லையா? இவர்களில் இருந்தும் சில தலைவர்கள் வர வாய்ப்புகள் உண்டு இல்லையா? குறைகளற்ற மனிதர் இல்லை, மனிதம் காக்க, குறைகள் பொறுப்போம், பொறுத்தாற்றியதை கற்றுத்தெளிவோம்.