
இந்தத் தை முதல் நாள் அன்று, சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில வாங்கிய ஷீலா தர்’ரின் நமது இந்தியா புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஏன் இதை வாங்கினேன் என நினைவில் இல்லை. எஸ்.ரா’வின் எனது இந்தியா நினைவில் வந்து போயிருக்கலாம்.
சிறு வயதில் என் தந்தையின் புத்தக சேமிப்பில் கண்ட சோவியத் நூட்களைப் போல அழகான தரமான கட்டமைப்பு. வண்ண ஓவியங்களுடன் பதின்ம வயது சிறுவர்களை மனதில் வைத்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய குடியரசின் 25ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த நூலானது, மீண்டும் 2000ல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்தியின் முன்னுரையோடு வெளி வந்திருக்கும் இந்த நூல் தமிழில் திரு. ஏ. ராமசந்திரன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு, இந்திய பதிப்பு துறையால் வெளியிடப்பட்டிருக்கின்றது. சற்றே சோஷலிச சாயல் தென்பட்டாலும், இந்தியா என்கிற மகத்தான கனவை பற்றிய எளிய அறிமுகத்தை இந்த நூல் வழங்குகின்றது. ரசாயன உரங்கள், அணைக்கட்டுகள், அணு உலைகள் போறவை சாதனைகளாக சொல்லப்படுவது இன்றைக்கு சற்றே முரணாக (எனக்கு) தோன்றினாலும், இந்திய வரலாற்றை, அதன் சுதந்திர போராட்டத்தை, இந்திய குடியரசின் தோற்றத்தை, உடன் வந்த பிரிவினையை, குழந்தைகளுக்கான அளவில், முழுமையாகவும் தெளிவாகவும் சொல்லிச் செல்கின்றது இந்த புத்தகம்.
ஒரு குழந்தையின் நிலையிலிருந்து யோசித்து பார்க்கின்றேன். இன்றைய தினத்தில் ஒட்டு மொத்தமாய் இந்தியா என்கிற சித்திரத்தைத் தருமளவுக்கு வேறெதும் ஊடகம் நம் குழந்தைகளுக்கு இருக்கின்றதா என்று யோசிக்கும்போது தான் இம்மாதிரியான புத்தகங்களின் அருமை புரிகின்றது. எங்கும் வெறுப்பும், வெற்று கூச்சல்களும், வாய் சவடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், ஆம், நாம் நம் கை விரல்களைப் போலச் சற்றே மாறு பட்டவர்கள், ஆனாலும் ஒன்றிணைந்து ஒரு தேசத்தைக் கட்டியமைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. வெறுப்பல்ல அன்பே இந்தத் தேசத்தின் முகம் என்று கனிவாய் சொல்லவும் ஒரு புத்தகம் என்பதே கிளர்ச்சியளிக்க கூடியதாய் இருக்கின்றது.