சமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.

நீர்ஜா

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இதிலுள்ள பெரிய சவால், கதை எல்லோருக்கும் தெரியும் என்பது தான். பொதுவாக என்னை பயோ-பிக்குகள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை. ஆனால் சோனம் கபூருக்காகப் பார்க்க வேண்டிய படம் என்று என் லிஸ்டில் இருந்தது. நேற்றைய இழுவையான மேட்சின் போது திடீரென இதைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். எதிர்பாராமல் பார்க்க நேரும் இம்மாதிரியான படங்கள் தான் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்கின்றன. ஒரு முன் இரவில் கதை தொடங்குகிறது. ஒரு பக்கம் அன்றைய (1984) பாம்பேயில், சாதாரண மத்தியத் தர குடும்பப் பார்ட்டி ஒன்றில் நீர்ஜா குழந்தைகளோடு பலூனை வெடித்து விளையாடிக்கொண்டிருக்கையில், 1:30 மணி தூரத்தில் இருக்கும் கராச்சியில் பாலஸ்தீன தீவிரவாதிகள் அடுத்த நாள் வரப்போகும் Pan Am விமானத்தைக் கடத்துவதற்காக வெடிபொருட்களைத் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். வழக்கமான கடத்தல் கதைகளில் உள்ளது போலக் குழந்தைகள், கர்ப்பிணி, வயதான பெண்மணி என்று இதிலும் உண்டு. ஆனால் அவர்களை பற்றியெல்லாம் இழுக்காமல் கதை நீர்ஜாவை மட்டுமே சுற்றி வருகிறது. உயிர் பயத்தை தன் இழந்த மண வாழ்க்கை அனுபவத்திலிருந்து போக்குவது, துப்பாக்கி முனையிலும் கடமையைச் செய்யப் போராடுவது, அமெரிக்கர்களிடம் இருந்து மட்டும் பாஸ்போர்ட் வாங்காமல் அவர்களை காப்பாற்றுவது, அந்த காதல் கடித்ததைப் படிக்கையில் கண்ணீரோடு புன்னகைப்பது என சோனம் கபூர் நீர்ஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஸிண்டகி பேடி ஹனீ சாஹியே லாம்பி நஹி (வாழ்க்கை நீண்டதாக இருக்கத் தேவை இல்லை, பெரிதாக இருந்தாலே போதுமானது) என்ற ஆனந்த் (1971) பட வசனத்திற்கும் நியாயம் செய்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நடிகர் ஷாபனா ஆஸ்மி. மகளுக்காக மஞ்சள் நிற உடை எடுக்க செல்கையிலும், இறுதியில் விமான நிலையத்தில் வந்திறங்கும் சவப்பெட்டியில் அந்த உடையை வைக்கும் போது கொடுக்கும் முகபாவங்களிலும் கண் கலங்க வைத்துவிடுகிறார். நிச்சயமாக சோனம் கபூரின் சிறந்த படங்களில் ஒன்றாக இது நிலைத்திருக்கும்.

தடம்

ஒருரு இரட்டையரில் யார் கொலையாளி எனத்தெரியாமல் காவல்துறையும், நீதித்துறையும் திணறி இறுதியில் இருவரையும் விடுவித்தால் அது தான் தடம். இரட்டையரில் (அருண் விஜய்) எழில் சிவில் என்ஜினியாராக பணி புரியக் கவின் தன் நண்பன் சுருளி (யோகி பாபு) உடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளைச் செய்து வருகிறார். ஒரு நாள் ஆனந்த் என்பவன் கொலையாகப் பழி எழில் மீது விழுகிறது. அதே சமயம் குடிபோதையில் போலீஸ் வண்டி மீது இடித்ததாகக் கவினும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகிறார். இருவரில் ஒருவர் கொலையாளி என்கிற நிலையில், பழைய பகையை மனதில் வைத்து எழிலை மடக்க நினைக்கிறார் இன்ஸ்பெட்டராக வரும் பெப்ஸி விஜயன். இன்னொரு புறம், கவினின் நடத்தையை வெறுக்கும் எஸ்.ஐ. வித்யா கவினைத் தண்டிக்கவேண்டும் என நினைக்கிறார். இந்த நிழல் யுத்தத்தை எப்படி இரட்டையர் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை சீட் நுனியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கவினுக்கு எப்படி எழில் கைதானது தெரியும், பல வருடங்களாகத் தொடர்பே இல்லதா பெண்ணை திடீரென ஏன் ஆன்ந்த் கடத்தினான், சண்டையிட்டாலும் ஏன் இருவரும் ஒன்று சேர்ந்தனர் என விடை தெரியாத கேள்விகள் பல. ஆனால் சுவாரசியமான திரைக்கதையில் அவையெல்லாம் மறந்து விடுகின்றன. இரண்டு கதாநாயகிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை என்றாலும், இருவருமே கிடைத்த வாய்ப்பில் பிரகாசிக்கின்றனர். கள்ளம் கபடமற்ற ஸ்மிருதி தன் கண்களாலேயே உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். இன்னொரு நாயகி தான்யா ‘கேள்வியைச் சரியா கேளுங்க’ என சுவரசியப்படுத்துகிறார். ஒருமுறை பார்க்கலாம்.

சூப்பர் டீலக்ஸ்

சமீபத்திய ஓவர் ஹைப் படங்களுள் ஒன்று. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் (7-8 வருடங்களுக்குப் பிறகு!). தமிழ் இளம் இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று விளம்பப்படும் மிஷ்கின், நலன், நீலன் ஆகியோரும் பணிபுரிந்த திரைக்கதை, விஜய் சேதுபதி பெண்ணாக நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கதை என்ன? வேம்பு பழைய காதலனோடு உறவில் ஈடுபடுகையில் அவன் இறந்துவிடுகிறான். கணவனுக்குத் தெரிய வருகையில் அவன் எதிர்வினை என்ன? நான்கு பதின்பருவ சிறுவர்கள் நண்பன் வீட்டில் நீலப்படம் பார்க்கச் செல்கின்றனர். படத்தில் நடித்திருப்பது தன் அம்மா என ஒருவனுக்குத் தெரிய வரும்போது கோபத்துடன் தன் அம்மாவைக் கொல்ல புறப்படுகின்றான். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன நடந்தது? கோபத்தில் அவன் உடைத்த தொலைக்காட்சியை அப்பா வருவதற்குள் மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மீதம் இருப்பவர்கள். எப்படி அவர்கள் டிவியை மாற்றினார்கள்? சுனாமியில் இலட்சம் பேர் சாக ஒருத்தன் மட்டும் பிழைக்கிறான். தனக்குக் கடவுள் அருள் உள்ளதாக எண்ணி நோயுற்றவர்களை குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்கிறான். அவன் மகனே விபத்தில் சிக்கும் போது என்ன செய்கிறான்? இன்னொரு புறம் ஏழு ஆண்டுகளுக்கு முன் தங்களை விட்டுச் சென்ற மாணிக்கம் திரும்பி வருகிறான் என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவனின் மனைவி ஜோதியும், மகன் ராசுக்குட்டியும். ஆனால் வருவதோ பாலின மாற்றம் செய்துகொண்ட ஷில்பா. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன? இவற்றிர்கான பதில் தான் சூப்பர் டீலக்ஸ். படத்தின் மிகப்பெரிய ப்ளெஸ் வசனங்களும், நடிப்பும். சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்கள் கூட அந்த கதாபாத்திரத்திற்கு வழு சேர்கின்றனர். மிகப்பெரிய மைனஸ் நேரமும், படம் நடப்பது எந்த காலகட்டமும் என்ற குழப்பமும் தான். உலக முழுவதும் திரைப்படத்தின் நேரம் குறைந்து வருகின்றது. உலக சினிமாக்கள் என்று போற்றப்படும், விருதுகள் அள்ளும் படங்களே ஒரு மணி நேரம், கூட சில நிமிடங்களில் முடிவடையும் போது மூன்று மணி நேரம் என்பது அநியாயம். அதிலும் சமந்தா பகத் பாசில் வரும் பகுதிகள் என் பொறுமையைச் சோதித்தன. கணவன் இருக்கையில் பழைய காதலனோடு உறவு என்பது பத்து வருடத்துக்கு முந்தய ஹிந்தி படங்களின் கதை. இன்று இந்திய தொடர்களில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது இம்மாதிரியான கதையைக் கொண்டிருக்கும். மேலும், பெட்டுக்குள் பிணத்தை வைத்து கீழே போடுவது, பிணத்தை காருக்குள் வைத்துக்கொண்டு சாவதானமாக இருவரும் பேசிக்கொண்டு சொல்வது, இருவரின் மிகை நடிப்பு என இந்த பகுதி படத்தில் ஒட்டவே இல்லை. இன்னொரு புறம் முன்னால் நீலப்பட நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணனும் அவர் கணவனாக வரும் மிஷ்கினும் அசரடிகிறார்கள். விரும்பித்தான் அந்த படத்தில நடிச்சேன், எல்லாத்தையும் மாதிரி அதுவும் ஒரு தொழில் தான் எனச் சொல்லும் காட்சிகளில் கம்பீரமாக மிளிர்கிறார் ரம்யா. அற்புதமாக வரும் மிஷ்கின் தன் மனைவி தன்னை கேள்விகேட்கும் போது அதிர்ச்சியில் உறைவதும், தன் கடவுளிடம் தன் மகனுக்காக மன்றாடுவதும் என நடிப்பில் பின்னுகிறார். சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தது போல மிஷ்கின் என்னும் நடிகனைத் தமிழ் சினிமா இன்னும் அதிகமா உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவன் கட்டளை வந்த போது விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகனாய் இருந்தேன். ஆனால், இப்போதெல்லாம் உணர்ச்சிகளற்ற ஒரு பிம்பமாகவே தன் கதாபாத்திரங்களைக் கையாள்கிறார் எனத் தோன்றுகிறது. அதே போல அவர் ஏற்றிருக்கும் திருநங்கை பாத்திரமும் அது பற்றிய எந்த புரிதலும் இன்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அவரைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மூன்று பேர், பகத் வீட்டுக்கு வரும் அந்த வால் பையனும், விஜய் சேதுபதியின் மகனாக வரும் ராசுக்குட்டியும் மற்றும் அந்த முட்ட பப்ஸு குண்டு பையனும். கலக்கியிருக்கிறார்கள். கஷ்ட நேரத்தில் சிலையிலிருந்து வைரம் கொட்டுவது, க்ளைமாக்ஸில் யாருக்கும் சேதாரம் இன்றி வில்லன் தலையில் டிவி விழுவது எனப் பல க்ளிஷேக்கள். இடையில் ஒரு ஏலியன் வேறு வருகிறது. விமர்சகர்களின் கருத்துக்களைப் பார்த்தால் இது ஒரு குறியீட்டுப் படம் என்று தெரிய வருகின்றது. பரத்வாஜ் ரங்கன் போன்ற சினிமாப் புலிகள் முதுகில் இருக்கும் மச்சம் கட் பண்ணினால் அடுத்த ஷாட்டில் எப்படி முகத்தில் வருகின்றது என்று ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். மற்றபடிக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.