சித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள்? வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி? மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த கொடைக்கு அவளுக்கு பிடித்த பச்சை பாவடை அணிய வேண்டுமென்பது அவள் கனவு. அவளுக்கு அப்பா நியாபகத்துக்கு வந்தார். அவள் கேட்டதை ஒரு போதும் வாங்கி தந்திடாத, அவள் ஆசைகளை ஒரு போதும் நிறைவேற்றிவிடாத அப்பா. அவள் அப்பாவிடம் கேட்ட, அவர் ஒருபோதும் வாங்கித்தந்திடாத பச்சை பாவடை சட்டையின் நியாபகமும் வந்தது. மழை நீர் பட்டு பொன் என மின்னும் சோளத்தின் மரகதப்பச்சை. ஏன் அப்பா என் ஆசைகளை ஒரு போதும் புரிந்துகொள்ளவில்லை என நினைத்தாள். அதிருக்கட்டும், நீ என்ன புரிஞ்சுக்கிட்டியா என்ற கண்மணியின் குரல் தூரத்தில் எங்கிருந்தோ கேட்டது.

சித்ரா திடுக் என விழித்துக்கொண்டாள். செல்போனில் அலாரம் ஐந்து மணி ஆகிவிட்டது என்பதை அடித்துச்சொல்லிக்கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்து, கூந்தலை முடிந்து கொண்டே பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கண்மணியை பார்த்தாள். உறக்கத்திலும் ஒடுபவள் போல முகம் தீவிரமாய் இருந்தது. பிடிவாதக்காரி. நம்மை விடவா என்று நினைத்துக்கொண்டாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அதை தவிர்க்க விரும்புபவள் போல ‘ஹீம்’ என்று சேலையை உதறியபடி, கட்டிலை விட்டு கீழே இறங்கி, அறையில் இருந்து வெளியே வந்தாள். கூடத்தில் படுத்திருந்த அம்மாவும் அலாரா சத்தத்துக்கு எழுந்து விட்டிருந்தாள். மெளனமாக சித்ராவை பார்த்துவிட்டு, படுக்கையை சுருட்டிக்கொண்டு இருந்தாள். ஒரு போதும் பேசதவள். சித்ரா கணவனை உதறி வீட்டுக்கு வந்த நாளிலும் இதே பார்வையைத்தான் வீசினாள். பெரியம்மா தான் பொறுக்கமாட்டாமல் ஊமக்கோட்டனே நீயாவது சொல்லித்தொலையேண்டி என்று கத்தி கொண்டிருந்தாள். அதற்கும் அம்மா ஒன்றும் பேசவில்லை. அப்போது பேசி இருந்தாலும் ஒன்றும் நடந்திருக்கப்போவதில்லை. பேசுவதற்கு அவளுக்கு வாய்த்த தருணங்களில் ஒரு வேளை பேசி இருந்தால் இப்போது சித்ராவின் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும்.

சித்ரா, பால் பீச்சுவதற்காக பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தூரத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த செவலை அந்த இருட்டிலும் இவளை அடையாளம் கண்டுகொண்டு மெலிதாக ‘ம்மே’ என்றது. பாத்திரத்தை வெளி சுவரில் வைத்துவிட்டு, அருகில் கிடந்த சீவமாரையும், சாணிக்கூடையையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். செவலையின் குட்டி வெறித்த கண்களுடன், இவளையே பார்த்தது. அதனை கட்டியிருந்த கயிறு பல வாறாக அதன் கால்களிளேயே சுற்றி இருப்பது தெரிந்தது. அதன் கண்களை பார்த்தவளுக்கு கண்மணியின் நியாபகம் தான் வந்தது. பதினோரு வயதுதான் ஆகின்றது. எதைப்பற்றியும் பயமில்லை. எதைப்பற்றியும் கவலை இல்லை. தான் இந்த வயதில் எப்படி இருந்தோம் என வியந்தாள். கிழிந்த பாவாடையும் சட்டையுமாக காய்ந்து போன சோளக்காட்டுக்குள் ஆடு மேய்க்க வரும் பையன்களுடன் ஓடி ஜெயித்தது தான் நினைவில் இருந்தது. கண்மணிக்கு ஓட்டமெல்லாம் பிடிப்பதில்லை. ஏன் வெயிலிலேயே அவள் செல்வதில்லை. அவள் தகப்பனை உரித்து பிறந்திருக்கிறாள். இவளைப்போலன்றி கணக்கென்றால் உயிர் அவளுக்கு. வகுப்பில் முதலிரண்டு இடங்களுக்குள் வந்து விடுகிறாள். ‘செம ப்ரிலியண்டுங்க உங்க பொண்ணு. நல்லா படிக்க வைக்கங்க’ என்ற கார்த்திகா டீச்சரின் குரல் நியாபகத்துக்கு வந்தது. ஆம். அது மட்டுமே அவளால் முடிந்தது. அவள் அடையாத உயரங்களை அவள் மகள் அடையவேண்டும். அவமானமே அன்றாடமாகிப்போன இந்த வாழ்வில், அவள் வாழ்வதன் ஒரே அர்த்தம் கண்மணி தான்.

கண்மணியைத் தூக்கி கொண்டு சித்ரா பிறந்த வீட்டுக்கு வந்த போது அவளுக்கு மூன்று வயது. தனிமை இறுகும் தருணங்களில் கண்களில் தானாக கண்ணீர் வழியும். ‘ம்மா, அழாதமா… நான் உனக்கு சாக்கி வாங்கி தரட்டா’ என்று மழலையில் கொஞ்சும் கண்மணி தான் அவளை எல்லாவற்றில் இருந்தும் மீட்டாள். ஆனால், அவள் வளர, வளர, இருவருக்கும் இடையே ஒரு மெளன சுவர் மெலிதாய் எழும்பத்தொடங்கி விட்டது. இருவருக்குமான பிணைப்பு சண்டை, அவளின் பிடிவாதம், இவளின் தவிப்பு, பின் மகளுக்காக என இறங்கி சமாதானமடைகையில் மீண்டும் சண்டை எனத்தொடர்ந்து ஊசலாடிக் கொண்டு இருந்தது. இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென சிணுங்கல். தெற்காளூர் ரவியின் பையனுக்கு போன வாரம் பிறந்தநாள். வகுப்பில் கூடப்படித்த எல்லோரையும் கூப்பிட்டிருந்தான். இவள்தான் சாயங்காலம் சொசைட்டிக்கு பால் ஊற்றச்செல்லும் முன் சைக்கிளில் கொண்டுபோய் அவன் வீட்டில் இறக்கிவிட்டு வந்தாள். திரும்ப கூட்டிவரும் போதே கோரிக்கைகள் ஆரம்பமாகின. அம்மா, எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள, நானும் என் ப்ரெண்ட்ஸ கூப்பிடட்டா என்றாள் கண்மணி. இவள் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் காலையில், அம்மாயி எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள அப்ப என் எல்லா ப்ரெண்ட்ஸயும் வீட்டு கூப்பிட போறேனே என இவள் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. இவள் உள்ளே நுழையவும் கண்மணி தலையை குனிந்து கொண்டாள். அம்மா வழக்கம் போல வெறுமையாய் இவளைப்பார்த்துவிட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்த தோசையை திருப்பிப்போட்டாள்.

கறந்த பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது கண்மணி எழுந்து விட்டிருந்தாள். இவளைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டாள். சமையல்கட்டில் இருந்த அம்மாவிடம் பாலை கொடுத்துவிட்டு வெளியே வந்து, கண்மணியை பார்த்து டீ குடிக்கறியாடி என்றாள். அவள் ஏதும் சொல்லாது, புத்தகப்பையை நோண்டிக்கொண்டிருந்தாள். கோபமாக இருந்தது. என்ன பெண் இவள்? ஒரு தற்காலிக பி.டி. ஆசிரியைக்கு என்ன சம்பளம் இருந்து விட போகிறது. மாதம் 7500 வருகின்றது. சொசைட்டியில் இருந்து ஒரு 3000 வரும். அதும் பேங்கில் தான் போடுவார்கள். அதை எடுக்க கூட யாராவது தயவு வேண்டும். ஆண்கள் தான் நகருக்கு செல்பவர்களாய் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பேசினாலோ அவர்களின் மனைவிமார்களின் சாடைப்பேச்சிற்கு ஆளாக வேண்டும். கணவனை பிரிந்திருப்பவள் என்றாலே எல்லோருக்கும் ஒரு இளக்காரம் வந்து விடுகின்றது. ஆண்களுக்கோ இவளே வந்து மடியில் விழுவாள் என்ற எண்ணம். பெண்களுக்கோ தங்கள் வீட்டு ஆணை மயக்கி கூட்டிச்செல்வதே இவள் நோக்கம் என சந்தேகம். ஊருக்குள் இவளைப்பற்றிய பேச்சுகள் தெரியாததல்ல. சொசைட்டி ஆறுமுகத்தை இவள் வைத்திருப்பதாய் ஒரு பேச்சை இவளே கேட்டு இருக்கிறாள். கேட்டபோது இவளுக்கு முதலில் தோன்றியது அது மட்டும் உண்மையாய் இருந்தால் அவ்வளவு சிரமப்பட்டு சைக்கிளில் பால் கேனை ஏற்ற வேண்டி இருக்காது என்பதே. ஒவ்வொரு நாளும் கேனை ஏற்றி கட்டி, சைக்கிள் மிதித்து, மீண்டும் இறக்கி ஊற்றி எடுத்து வருவதன் வேதனை அவளுக்குத்தான் தெரியும். ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும் தோறும் தன் தந்தையை நினைத்துக்கொள்வாள். அவரைப்போன்று இருக்க கூடாது. என் மகளை நான் சிறப்பாய் வளர்ப்பேன் என்றெண்ணிக்கொள்வாள்.

கண்மணியின் அடம் தொடங்கியது எப்போது என சரியாக நியாபகம் இல்லை. சில நேரங்களில் தன் தகுதிக்கு மீறி அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தது தான் தவறோ என்று தோன்றும். அவ்வாறான ஒரு நாளில் தான் பணத்தை கண்மணியிடம் கொடுத்தே எண்ணச்சொல்ல ஆரம்பித்தாள். அதுல 7500 இருக்கா பாப்பா? ஒரு 2500, உன்னோட நகை சீட்டுக்கு, 2000 உன் பேருல இருக்கற சேவிங்ஸ் அக்கெளண்டுக்கு, 2000 பீசுக்கு, 4000த்த அம்மாயிட்ட இந்த மாச செலவுக்கு கொடுத்திடு என்பாள். இவள் இருபதை எட்டுமுன் ஒரு 10 பவுனாவது சேர்த்துவிட வேண்டும். ஒருவேளை ஏதாவது நல்ல காலேஜிக்கு போனாலோ, அல்லது கல்யாண செலவுக்கென்றோ ஒரு ரெண்டு மூணு இலட்சத்தையாவது சேர்த்து விட வேண்டும். இது தான் சித்ராவின் இப்போதைய இலக்கு. ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளும் வயது இல்லையே. டிசைன் செருப்பு, புது புத்தகப்பை, வாட்ச் என இப்போது இந்த பர்த்டே கொண்டாட்டத்தில் வந்து நிற்கின்றது. இரண்டு நாளாக எப்போதும் பணம் எடுத்து வந்து தரும் மாரிப்பண்ணனை காணவில்லை என்று நேற்று சித்ராவே வேடசந்தூருக்கு பணம் எடுக்க போனாள். திரும்பி வருகையில் ஒரு பேக்கரியில் கேக் விலைகளை விசாரித்துக்கொண்டாள். கேக், புது ட்ரெஸ், யாரவது வந்தால் அவர்களுக்கு திண்பண்டம் என எப்படியும் ஒரு இரண்டாயிரம் செலவாகிவிடும் போலிருக்கின்றது. எங்கு எதை குறைக்கலாம் என பேருந்தில் யோசித்தபடியே வந்தாள். எதுவுமே தோன்றவில்லை. கடன் கேட்கலாம். கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதை எப்போது திருப்பி தருவது?

அம்மா வைத்த டீயை குடித்து முடித்தவள், எழுந்து குளிக்கப்போனாள். நாளை வேறு திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டும். ஸ்போர்ட்ஸ் மீட். ஒரு காலத்தில் சித்ராவுக்கு ஸ்போர்ட்ஸ் மீட் என்றால் ஒரு மாதத்துக்கு முன்பே உற்சாகம் தொடங்கிவிடும். குறுகுறுப்பான பையன்களின் கண்கள், அதட்டும் பி.டி. சார்கள், எல்லாவற்றையும் விட, வெல்லும் போது கிடைக்கும் கைத்தட்டு என அது வேறு ஒரு உலகம். இப்போதெல்லாம், மாணவர்களை அழைத்துச்செல்லும் பதட்டம் மட்டுமே. மேலும் இவ்வாறு சென்றால் எப்படியும் திரும்பி வர இரவாகிவிடும். பால் எடுத்துச்செல்ல முடியாது. யாரையாவது அதற்கு கெஞ்ச வேண்டும். முதல் முறை ஹெச்.எம். இவளை பழனிக்கு ஒரு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்று வர சொன்னபோதே தயங்கினாள். மேல் ஸ்டாப் யாரையும் அனுப்பலாமே சார் என்றாள் தணிவான குரலில். யம்மா யார அனுப்பனும் அனுப்பக்கூடதுனெல்லாம் நான் தான் முடிவு பண்ணணும் நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என அந்த கிழவர் சீறினார். இதே ஆள் இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் நியாபகத்துக்கு வந்தன. சித்ரா பேசாமல் வெளியே வந்துவிட்டாள். இப்போது எல்லாம் பழகிவிட்டது. மதிய உணவு வேளைகளில் இவள் தனியாக அமர்ந்து சாப்பிடும் போது, ஓரக்கண்ணால் இவளைப் பார்த்துக்கொண்டே இவளைப் பற்றி பேசப்படும் கிசுகிசுப்புகள் அலுத்துவிட்டன.

கண்மணியை பஸ் ஏற்றிவிட்டு, சித்ரா பள்ளிக்குள் நுழைந்த போது மணியடிக்க இன்னமும் நேரம் இருந்தது. நேராக அலுவலகத்திற்குள் நுழைந்தவள், சரவணன் சார் சீட்டுக்கு போனாள். அவர் ஒரு வகையில் இவளுக்கு சிற்றப்பா முறை ஆகின்றது. கொஞ்சம் கனிவானவர். அவசரத்திற்க்கு கை மாற்று வாங்குவதெல்லாம் அவரிடம் தான். இவளை பார்த்ததும் என்ன என்பது போல பார்த்தார். ‘சார், ஒரு ரெண்டாயிரம் வேணும். ஒண்ணாம் தேதிக்கு மேல தந்திடறேன்’ என்றாள். ‘ரெண்டாயிரமா? என்னம்மா மாசக்கடசி அதுவுமா? எதும் பிரச்சனையா?’ என்றார். ‘இல்ல சார். பாப்பாக்கு பொறந்தநாள் வருது. புது ட்ரெஸ் வேணும்னு ஒரே அடம் அதான்’ என்றாள். ‘இந்த காலத்து பிள்ளைகளே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டவர், உள் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் தாள்களை எடுத்தார்.

மாலை வீட்டுக்குள் நுழைந்த போது நிம்மதியாய் இருந்தது. பீரோவை திறந்து காசை வைத்தவள், புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கண்மணி பஸ்சில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது. அவள் உள்ளே வந்ததும், ‘கிளம்பி ரெடியா இருடி. போய் உன் ப்ர்த்டேக்கு ட்ரெஸ் எடுத்திட்டு கேக் ஆர்டர் கொடுத்திட்டு வரலாம்’ என்றாள். கண்மணி முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் தலையை குனிந்து கொண்டே உள்ளே போனால். சித்ராவிற்கு கண்கள் சிவந்தன. பால் கேனை வேகமாக தூக்கி சைக்கிளில் வைத்து கயிறை இறுக்கினாள். சொசைட்டியில் இருந்து திரும்பிய போது, அம்மாவும் கண்மணியும் வாசலில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. கண்மணி அவளுக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண பிராக்கை அணிந்திருந்தாள். இவள் முகம் கழுவி பொட்டிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு, ‘உம் வா போலாம்’ என்றாள். கண்மணி அப்போதும் ஒன்றும் பேசமால் எழுந்து கொண்டாள். இருவரையும் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். சென்னை சில்க்ஸில் கூட்டமாய் இருந்தது. சித்ராவிற்கு பிடித்த எதுவும் கண்மணிக்கு பிடிக்கவில்லை. கண்மணிக்கு பிடித்தது எதுவும் சித்ராவின் விலையில் இல்லை. ஒரு வழியாய், ஆயிரம் ரூபாயில் ஒரு மஞ்சள் சொக்காயை இறுதியாக கண்மணி எடுத்துக்கொண்டாள். வெளியே வந்த போது சித்ராவிற்கு விலை சற்று அதிகம்தான் என்று தோன்றியது. அன்று பார்த்த பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டு வந்த போது மணி 9ஐ நெருங்கியிருந்தது. மேற்குத்தெருவில் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் படுத்திருந்தவர்களெல்லாம், ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி இவளையும், கண்மணியையும் பார்த்தார்கள். யாரும் எதும் கேட்கவில்லை. சித்ரா, கண்மணியின் கையை பிடித்துக்கொண்டு வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

கண்மணியின் பிறந்தநாளுக்கு ஒரு ஏழெட்டு பேர் வந்திருந்தனர். அவள் நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டும் என்றதை சித்ரா முடியாது என்றுவிட்டாள். குழந்தை எந்த உற்சாகமும் இன்றி கேக்கை வெட்டி விட்டு, சம்பிரதாயமாக எல்லோருக்கும் ஒரு துண்டு கொடுத்தாள். சித்ராவின் அம்மா, சேலையில் முடிந்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை பேத்தியின் நெற்றியை வழித்து கையில் திணித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம், கண்மணி உள்ளே சென்று படுத்துக்கொண்டால். சாலையூர் பெரியப்பா கிளம்பியவுடன் உள்ளே வந்து விளக்கை போட்ட சித்ரா, ‘இந்தாடி, ஏன் இந்நேரத்திலேயே படுத்து கிடக்க. எந்திரி சாப்புட்டு படுப்பியாம்’ என்றாள். கண்மணி ஒன்றும் பேசவில்லை. முதுகு மட்டும் குலுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. திருப்பியவள், கண்மணியின் கண்ணீரைப்பார்த்து அதிர்ந்தாள். ‘என்னடி என்னாச்சு?’ என்றபடியே கழுத்தை தொட்டுப்பார்த்தாள். ‘விடு என்ன… போ இங்கிருந்து’ என்று திமிறினாள் கண்மணி. ‘என்னடி’ என்று அதிர்ச்சியாய் பார்த்தாள் சித்ரா. ‘என்ன ஏன் இப்படி அவமானப்படுத்தற… உன்ட நான் இப்படியே பர்த்டே வேணும்னு கேட்டேனா. சிவாலாம் சாக்லேட் கேக் கட் பண்ணான் தெரியுமா… உன்ன யாரு வெணிலா வாங்க சொன்னது. நாளைக்கு ஸ்கூல் போன என் ப்ரெண்ட்ஸெல்லாம் சிரிப்பாங்க’ என்றபடி கேவினாள். சித்ராவிற்கு யாரோ செவுளில் அரைந்தது போலிருந்தது. ‘என்னால இவ்வோளோ தான்டி முடியும் இதுக்கே என்ன பாடு படறேனு எனக்குத்தான் தெரியும்’ என்றாள் சித்ரா. ‘எங்கப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா, உன்ன யாரு எங்கப்பா விட்டு வர சொன்னா’ என்று கத்தினாள் கண்மணி. சித்ராவுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. பட் பட்டென்று குழந்தையை அடித்து தீர்த்துவிட்டாள். ‘அய்யோ கொல்றாளே… நான் எங்கப்பாட்ட போறேன் என்ன விடு விடு’ என்று கத்தினாள் கண்மணி.

காலையில் எழுந்த போது, கண்மணி எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நேற்றிரவு நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வந்தது. வாஞ்சையாய் குழந்தையை கட்டிக்கொண்டாள். ‘விடு நான் அப்பாட்ட போகனும்’ என்று முனகினாள் கண்மணி. ‘போயேன் யார் வேண்டாம்னா’ என்றபடி வெடுக்கென்று எழுந்தாள். பால் பீச்சி வந்தபோது வாசலில் கண்மணி கையில் செல்போனுடன் நிற்பது தெரிந்தது. ‘அப்பாவுக்கு போன் பண்ணிக்கொடு’ என்றாள் இவளைப்பார்த்தவுடன். இவள் ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். கண்மணி பின்னாலே போன் பண்ணிக்கொடு என்றபடியே வந்தாள். சித்ராவுக்கு ஆத்திரமாய் வந்தது. போனை பிடுங்கி சங்கரின் நம்பரை டயல் செய்து கண்மணியிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்டு அவள் ‘அப்பா’ என்று கத்தியபடி வெளியே ஓடினாள். அன்று பள்ளியில் ஒரு வேளையும் ஓடவில்லை. இத்தனை கஷ்டப்பட்டது அத்தனையும் வீணா எனத்தோன்றியது. எல்லோரும் சொல்வது போல கணவனுடன் வாழத்தெரியவில்லை. இப்போது பெற்ற பிள்ளையையும் வளர்க்க தெரியவில்லை. எதற்கு தான் பிறந்தோம் என ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மாலை வீட்டுக்கு வந்த போது சாலையூர் பெரியப்பா வந்திருந்தார். ‘சங்கர் போன் பண்ணாம்மா, கண்மணிய பாக்கனுமாம்’ என்றார். ‘வந்து பாத்திட்டு போகச்சொல்லுங்க பெரியப்பா நான வேண்டாகிறேன்’ என்றாள் கோபமாக. ‘அதில்லமா அவன் வர முடியாதாம். பாப்பாவ கூட்டிட்டு வர சொன்னான். அதும் குழந்தை ஆசப்பட்டதால தானாம்’ என்றார். கண்மணி முன்பே கிளம்பி ரெடியாய் இருப்பது தெரிந்தது. சித்ரா கண்ணீருடன் உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இரவு ஓரிரு முறை அம்மா சாப்பிடக்கூப்பிட்டது மட்டும் லேசாய் கேட்டது. விழிப்பு வந்த போது, கண்மணி அருகில் படுத்திருப்பது தெரிந்தது. கண்ணில் கண்ணீர் பொங்க மகளை அணைத்துக்கொண்டாள். எப்போது வந்தாள், எப்படி வந்தாள்? மெலிதாய் அவள் நெற்றியை வருடியபடி நீண்ட நேரம் படுத்திருந்தாள். அலாரம் அடித்த போது அம்மா அறைக்குள் எட்டிப்பார்த்தாள். இவள் விழித்திருப்பதை பார்த்ததும், ‘அங்க போய் கொஞ்ச நேரத்துலையே அம்மாட்ட போகனும்னு ஒரே அழுகையாம். பதனோரு மணி போல உம்மாமனாரு கொண்டு வந்து விட்டுட்டு போனாரு’ என்றாள். எழுந்து வெளியே வந்த சித்ராவுக்கு, இன்னும் ஒரு மாதத்தில் அம்மன் கோவில் கொடை வருகிறது என்று நியாபகம் வந்தது. கண்மணிக்கு மரகதப்பச்சையில் ஒரு பாவாடை சட்டை எடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். கண்மணிக்கு பச்சை பிடிக்காது என்பதும் ஏனோ நினைவுக்கு வந்தது. சித்ரா இன்னொரு நாளுக்கு தயாரானாள்.